பவானி ஆற்றில் தண்ணீர் அருவியாக கொட்டாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்..!
கொடிவேரி தடுப்பணை வழியாக, பவானி ஆற்றில் தண்ணீர் அருவியாக கொட்டாததால் சுற்றுலா பயணிகள் நேற்று ஏமாற்றம் அடைந்தனர்.;
ஈரோடு : கொடிவேரி தடுப்பணை வழியாக, பவானி ஆற்றில் தண்ணீர் அருவியாக கொட்டாததால், சுற்றுலா பயணிகள் நேற்று ஏமாற்றம் அடைந்தனர். ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், கோபி அருகே கொடிவேரி தடுப்பணை வழியாக, பவானி ஆற்றில் அருவியாக கொட்டும்.
அருவியில் குளிக்கும் வசதி எளிமையானது
கொட்டும் அருவியில் குளிக்கும் வசதி எளிது என்பதால், அங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிகின்றனர். வழக்கமாக தடுப்பணை வழியாக, வினாடிக்கு, 100 முதல், 150 கன அடி வரை, தண்ணீர் அருவியாக கொட்டும் போது, சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளிப்பர். குறிப்பாக, வார விடுமுறை நாட்களில், அதிகளவில் சுற்றுலா பயணிகள் குளிக்கின்றனர்.
பவானி ஆற்றில் தண்ணீர் திறக்காததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
ஆனால், பவானி ஆற்றில் தண்ணீர் திறக்காததால், தடுப்பணை வழியாக நேற்று அருவியாக தண்ணீர் கொட்டவில்லை. இதனால், திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள் குளிக்க வழியின்றி, ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
பவானிசாகர் அணையில் தண்ணீர் இருப்பு குறைவு
இதுகுறித்து நீர்வள ஆதாரத்துறையினர் கூறுகையில், 'பவானிசாகர் அணையில், நேற்றைய நிலவரப்படி, 93.67 அடி மட்டுமே தண்ணீர் உள்ளது. அணையின் நீர் இருப்பை கருதி, சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டியுள்ளது. அதனால் பொங்கல் பண்டிகைக்கு பின், தடுப்பணை வழியாக பவானி ஆற்றில் தண்ணீர் திறக்கவில்லை' என்றனர்.