ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க., அ.தி.மு.க.வினரின் நூதன பிரசாரம்
ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க., அ.தி.மு.க.வினர் நூதனமான முறையில் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள்.;
ஈரோடு கிழக்கு தொகுதியில் எங்கு பார்த்தாலும் கூட்டம் கூட்டமாக சென்று ஓட்டு கேட்ட வண்ணம் இருக்கிறார்கள்.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார். அ.தி.மு.க. சார்பில் கே.எஸ்.தென்னரசும், தே.மு.தி.க. சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன், சுயேட்சைகள் உள்பட 77 பேர் போட்டியிடுகின்றனர்.
தங்களது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் ஈரோட்டில் கடந்த சில நாட்களாகவே முகாமிட்டு வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். தி.மு.க. ஆட்சிக்கு வந்து நடைபெறும் முதல் இடைத்தேர்தல் என்பதால் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தி.மு.க.வினர் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
குவிந்த அமைச்சர்கள்
இதற்காக அமைச்சர்கள் முத்துசாமி, சாமிநாதன், செந்தில் பாலாஜி, எ.வ.வேலு, கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன், ஆவடி நாசர், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, ஐ.பெரியசாமி, கீதாஜீவன், காந்தி, சக்கரபாணி, அனிதா ராதாகிருஷ்ணன் உள்பட 20-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் ஈரோட்டில் முகாமிட்டு தங்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ள பகுதிகளில் தேர்தல் பணியாற்றி வருகின்றனர்.
இதேபோல் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, எஸ்.பி. வேலுமணி, கே.சி.கருப்பணன், கே.வி.ராமலிங்கம், ஆர்.பி.உதயகுமார், நத்தம் விஸ்வநாதன், செல்லூர் ராஜூ, பா.வளர்மதி, எஸ்.கோகுல இந்திரா, கடம்பூர் ராஜூ, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, எஸ்.பி. வேலுமணி, தங்கமணி உள்பட 30-க்கும் மேற்பட்ட முன்னாள் அமைச்சர்கள் முகாமிட்டு அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் தேர்தல் பணியாற்றி வருகின்றனர்.
ஸ்டாலின் 2 நாள் பிரச்சாரம்
இந்நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு ஆதரவு தெரிவித்து வருகிற 24, 25-ம் தேதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய உள்ளார். 24-ந்தேதி மாலை வேட்டுக்காட்டு வலசு 19-வது வார்டு, நாச்சாயி டீக்கடை, சம்பத் நகர், பெரிய வலசு, காந்தி நகர், அக்ரஹாரம், வைரபாளையம், ராஜாஜி புரம் ஆகிய பகுதிகளில் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார். 25 -ம் தேதி காலை டீச்சர்ஸ் காலனி, சூரம்பட்டி நால்ரோடு, பெரியார் நகர், கள்ளுக்கடைமேடு, பழைய ரெயில்வே நிலையம் ரோடு, கருங்கல்பாளையம், சின்ன மாரியம்மன் கோவில், மணிக்கூண்டு, சென்ட்ரல் தியேட்டர், பன்னீர்செல்வம் பார்க் ஆகிய பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகிற 19, 20-ம் தேதிகளில் ஈரோட்டில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்
இதேபோல் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் கே.எஸ். தென்னரசுக்கு ஆதரவாக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த 15-ந்தேதி மற்றும் நேற்று மாலை பல்வேறு பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து இன்று மாலை 3-வது நாளாக காவேரி ரோடு, வண்டியூரான் கோவில், சின்ன மாரியம்மன் கோவில், வி.வி.சி.ஆர். நகர் போன்ற பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார். இதைத்தொடர்ந்து 2-வது கட்ட பிரசாரமாக எடப்பாடி பழனிசாமி 24-ந்தேதி மாலை டீச்சர்ஸ் காலனி, சூரம்பட்டி நால்ரோடு, பெரியார் நகர், பேபி மருத்துவமனை, வளையக்கார வீதி, காந்தி சிலை, மணிக்கூண்டு போன்ற பகுதிகளிலும், 25-ந்தேதி காலை வெட்டுக்காட்டு வலசு, சம்பத் நகர், பெரியவலசு, சத்யா நகர், ராஜாஜி புரம், முத்துசாமி வீதி, தெப்பக்குளம் போன்ற பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார். இதேபோல் தே.மு.தி.க .வேட்பாளரை ஆதரித்து மாநில துணைச்செயலளார் எல்.கே.சுதீஷ், விஜய பிரபாகரன் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் மேற்கொள்கிறார்.
சீமான் பிரச்சாரம்
நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த 13,14,15 ஆகிய நாட்களில் பிரசாரம் மேற்கொண்டார். 2-வது கட்ட பிரசாரமாக 21, 22, 23, 24, 25 ஆகிய நாட்களில் பிரசாரம் செய்கிறார். தேர்தலுக்கு இன்னும் 9 நாட்களே உள்ளதால் அரசியல் கட்சியினர் பிரச்சாரம் தீவிரம் அடைந்துள்ளது. தலைவர்கள் முற்றுகையிட்டுள்ளனர். வீடு, வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஈரோடு தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது.
இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கை சின்னத்தில் போட்டியிடுகிறார் என்றாலும், முழுக்க, முழுக்க தி.மு.க.வே தேர்தல் களத்தை ஆக்கிரமித்துள்ளது. ‘இந்த இடைத்தேர்தலில் உண்மையான வேட்பாளர் ஸ்டாலின் தான்’ என ஈ.வி.கே.எஸ். இளங்கோவனே அறிவித்து பிரச்சாரம் செய்கிறார். தனது இரண்டாண்டு கால ஆட்சிக்கு கிடைக்கும் நற்சான்றிதழாகவும், அடுத்த ஆண்டு நடக்கவுள்ள மக்களவைத் தேர்தலுக்கு முன்னோட்டமாகவும், உட்கட்சி பிரச்சினையில் சிக்கித் தவிக்கும் அ. தி.மு.க.வின் வாக்கு வங்கியை சிதைக்கும் வகையிலும் இந்த தேர்தல் முடிவு அமைய வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் விரும்புகிறார். அதற்காக, தனிக்கவனம் செலுத்தி, ஈரோடு கிழக்கில் பெரு வெற்றி பெற நினைக்கிறார்.
தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் அனைவரின் பணிகளும், தனிக்குழுக்கள் மூலம் முழுமையாக கண்காணிக்கப்படுகின்றன. ஒவ்வொரு அமைச்சரும் ஒரு நாளைக்கு எத்தனை பேரை சந்திக்கின்றனர் என்ற புள்ளி விபரம் தினமும் அனுப்பப்படுகிறது. இதையெல்லாம் விட, இரவு 8 மணியில் இருந்து தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மட்டுமல்லாது, கட்சி நிர்வாகிகளிடம் முதல்வர் நேரடியாக பேசி விபரம் கேட்கிறார். இன்று எங்கு பிரச்சாரம் செய்தீர்கள், எத்தனை வாக்கு வித்தியாத்தில் வெற்றி கிடைக்கும், மக்கள் மன நிலை என்ன என தனித்தனியே கேட்டுத் தெரிந்து கொண்டு வருகிறார் என்றார். கடந்த பொதுத்தேர்தலின்போது, ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளுக்கும் சேர்த்து, மொத்தம் இரண்டு இடங்களில் மட்டும் பிரச்சாரம் செய்தார் முதல்வர் ஸ்டாலின். ஆனால், 33 வார்டுகளை மட்டுமே அடங்கிய ஈரோடு கிழக்கு தொகுதியில், 24 மற்றும் 25 ஆகிய இரு நாட்கள் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
அ.தி.மு.க. இ.பி.எஸ் .,ஓ.பி.எஸ். அணி என இரண்டு அணிகளாக பிளவுபட்டு இருந்தாலும், நீதிமன்றத்தில் வழக்கு இருந்தாலும் எடப்பாடி நிறுத்தியுள்ள வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்குமா என்ற நிலை இருந்தது. இறுதியில் தனது வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பெற்று தந்தார். இரட்டை இலை சின்னம் கிடைத்ததும் அ. தி.மு.க.வினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். முழுவீச்சில் களத்தில் இறங்கினர். இந்த இடைத்தேர்தலில் எப்படியும் வெற்றி பெற்று தனது பலத்தை காட்ட வேண்டும். இந்த தேர்தல் வெற்றி வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் எதிரொலிக்க வேண்டும் என்பதற்காக பல யுக்திகளை மேற்கொண்டு களத்தல் நேரடியாக இறங்கி இருக்கிறார்.
போக்குவரத்து நெரிசல்
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் காரணமாக திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தேமுதிக , நாம் தமிழர் கட்சிகளின் தலைவர்கள் ஈரோட்டில் முகாமிட்டு உள்ளனர். தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் மக்களை சந்தித்து தங்கள் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள். இதனால் அந்தந்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. ஈரோட்டில் தலைவர்கள் பிரசாரம் காரணமாக சாலைகள் நெரிசலில் சிக்கியதால் பொதுமக்கள் அவதிபட்டனர். ஓட்டல்கள், டீக்கடைகள் எங்கும் கூட்டம் அலைமோதியது. காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவு தெரிவித்து தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், ஈரோடு திருநகர் காலனி பகுதியில் ஒரு டீக்கடைக்கு சென்று வடை சுட்டுக்கொடுத்து பொதுமக்களிடம் கை சின்னத்துக்கு ஆதரவு திரட்டினார்.
நூதன பிரச்சாரங்கள்
ஒவ்வொருவரும் நூதன பிரச்சாரம் செய்து மக்களை கவர்ந்து வருகிறார்கள். தி.மு.க. அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஜிலேபி சுட்டும், முறுக்குகளை விற்றும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து வாக்கு சேகரித்தார். தங்கள் தரப்பு வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய இந்நாள் அமைச்சர்கள் முதல் முன்னாள் அமைச்சர்கள் வரை விதவிதமாக மக்களை கவர்ந்து வருகிறார்கள். அமைச்சர் மஸ்தான் பரோட்டா, தோசை சுட்டும், டீ போட்டு கொடுத்தும் மக்களை கவர்ந்தார். உடற்பயிற்சி மையத்துக்கு சென்று உடற்பயிற்சி செய்தார். அதேபோல அ. தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வாக்கு சேகரிக்கையில் ஒரு இடத்தில் வாக்காளரின் ஜீன்ஸ் பேண்டிற்கு இஸ்திரி போட்டு வாக்கு சேகரித்தார். மேலும் அங்கு அவர் தேநீர் தயாரித்து கொடுத்ததும் வித்தியாசமாக வாக்காளர்களை கவர்ந்தார்.
அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து ஈரோடு கருங்கல்பாளையம் பகுதிகளில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேண்டு வாத்தியம் இசைத்து வீதி வீதியாக சென்று பொதுமக்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவு தெரிவித்து அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஈரோடு திருநகர்காலனி டீக்கடையில் வடை சுட்டு கொடுத்து பொதுமக்களிடம் கை சின்னத்துக்கு ஆதரவு திரட்டினார்.