கரும்பு கடையில் குழப்பத்தை ஏற்படுத்தும் காவல்துறை அறிவிப்பு

மைக்கில் அறிவிப்பு தரும் காவலர் ஆத்துப்பாலத்தில் இருந்து வரும் இருசக்கர வாகனங்கள் இடது புறம் வாருங்கள் என்று முறையாக கூறினால் குழப்பம் ஏற்படாது.

Update: 2023-03-07 14:00 GMT

கோவை கரும்புக்கடை பகுதி போக்குவரத்து

கோவை உக்கடத்தில் கடந்த பல ஆண்டுகளாக மேம்பாலப் பணி நடைபெற்று வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அன்றாடம் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வருகின்றனர். இந்நிலையில் ஆத்துப்பாலம் பகுதியில் சிக்னல் முறையை அப்புறப்படுத்தி ரவுண்டானா முறையை போக்குவரத்து காவல்துறையினர் ஏற்படுத்தினர்.

இதனால் வாகனங்கள் நெரிசலில் இருந்து தப்பி சீராக சென்று கொண்டிருக்கிறது. ஆனால் ஆத்துப்பாலத்தை தாண்டி கரும்பு கடை பகுதியில் மட்டும் ஆக்கிரமிப்பு அனைத்தையும் அகற்றாத காரணத்தால் குறுகிய சாலையில் வாகனங்கள் சிக்கி விடுகிறது. இதனால் அனைத்து வாகனங்களும் சிரமப்பட்டு பயணிக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. மிகவும் குறுகலான பகுதியில் அத்தனை வாகனங்களும் ஒரே நேரத்தில் கடந்து செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது.

மேலும் ஆத்துப்பாலத்தில் இருந்து வரும் வாகனங்களை போக்குவரத்து நெரிசலில் தவிர்க்கும் பொருட்டு போக்குவரத்து காவல்துறையினர் அங்கே நின்று கொண்டு சாலையின் இடதுபுறத்தில் இருசக்கர வாகனங்களை அனுப்பி வருகின்றனர். அதுவும் மைக்கில் சத்தமாக இரு சக்கர வாகனங்கள் இடதுபுறத்தில் வாங்க என்று கூவி கூவி அழைப்பார்கள். இருசக்கர வாகனங்கள் இடது புறமாக சென்று திரும்பி வலது புறம் வரும்போது அதே சாலையை தொட்டுவிடும். இதனால் சற்று வாகன நெரிசல் தவிர்க்கப்படுகிறது இந்த அறிவிப்பினை ஒரு போக்குவரத்து காவலர் எந்த நேரமும் நின்று கொண்டு அறிவித்துக் கொண்டே இருப்பார்.

இருசக்கர வாகனம் சாலையின் இடது புறமாக வாங்க...என்று மைக்கில் அறிவித்துக் கொண்டிருப்பார். ஆனால் அதே சத்தம் சாலையின் எதிர்முனையில் வரும் வாகனங்களும் கேட்கும். உக்கடத்தில் இருந்து ஆத்துப்பாலம் நோக்கி வரும் இருசக்கர வாகனங்கள் அதே குரலைக் கேட்கக் கூடிய சூழ்நிலை உருவாகிறது. ஒருவேளை அவர்கள் அந்த குரலைக் கேட்டு இடதுபுறம் திரும்பி விட்டால் கரும்பு கடை வழியாக ஊருக்குள் செல்ல வேண்டிய சூழத் உருவாகி, இது மீண்டும் குழப்பத்தை உருவாக்கும்.

எனவே மைக்கில் அறிவிப்பு செய்யும் காவலர்கள், ஆத்துப்பாலத்தில் இருந்து வரும் இருசக்கர வாகனங்கள் இடதுபுறம் வாங்க என்று கூறினால் மட்டுமே சாலையின் இரு புறமும் பயணித்துக் கொண்டிருக்கும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு குழப்பம் ஏற்படாது.

இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறுகையில்:- இது ஒன்றும் பெரிய தவறு கிடையாது. ஆனால் மைக்கில் அறிவிப்பு தரும் காவலர் ஆத்துப்பாலத்தில் இருந்து வரும் இருசக்கர வாகனங்கள் இடது புறம் வாருங்கள் என்று முறையாக கூறினால் குழப்பம் ஏற்படாது. இல்லையென்றால் எதிர்முனையில் உக்கடத்தில் இருந்து வரும் வாகனங்கள் குழப்பம் ஏற்பட்டு கரும்பு கடை ஊருக்குள் சென்று விடும். எனவே அறிவிப்பு தரும் காவலர் சரியாக அறிவிப்பு செய்தால் யாருக்கும் குழப்பமில்லாத சூழ்நிலை உருவாகும் என்று கூறினர்.

Tags:    

Similar News