கோவை மாவட்ட பலகார கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை
கோவை நகரில், 436 இனிப்பு, காரம் தயாரிக்கும் இடங்கள் மற்றும் விற்பனையகங்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.;
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவையில் இனிப்பு மற்றும் காரம் தயாரிக்கும் பலகார கடைகளில் விறுவிறுப்பான விற்பனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த தயாரிப்பு கூடங்களில் கடந்த சில தினங்களாக உணவு பாதுகாப்பு துறையினர் சோதனை ஈடுபட்டனர். காந்திபுரம், கிராஸ்கட் வீதி, உக்கடம், ஆர் எஸ் புரம் , சாய்பாபா காலனி உட்பட நகரின் பெரும்பாலான பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இந்நிலையில் சோதனை குறித்த விவரங்களை உணவு பாதுகாப்பு துறையினர் வெளியிட்டுள்ளனர்.
கடந்த சில தினங்களாக கோவை நகரில், 436 இனிப்பு , காரம் தயாரிக்கும் இடங்கள் மற்றும் விற்பனையகங்களில் ஆய்வு மேற்கொள்ளபட்டதாவும், இதில் 306 கிலோ அதிக வண்ண நிறமிகள் சேர்க்கப்பட்ட, தரமற்ற இனிப்பு காரவகைகள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சோதனையில் பலமுறை பயன்படுத்தப்பட்ட 1,780 லிட்டர் எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் உணவு பாதுகாப்பு துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் 57 விதமான இனிப்பு, கார வகைகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகங்களுக்கு சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதுடன், 32 கடைகளுக்கு விளக்கம் கேட்டு உணவு பாதுகாப்பு துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டு இருப்பதாகவும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.