கோவை மாவட்ட பா.ஜ.க தலைவர் கைது - பீளமேடு பகுதியில் தொண்டர்கள் சாலைமறியல்

நீலகிரி எம்.பி ராசா குறித்து பேசிய கோவை மாவட்ட பா.ஜ.க தலைவரை, போலீசார் கைது செய்தனர். போலீசாருடன் வாக்குவாதம் செய்த தொண்டர்கள், சாலைமறியலில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-09-21 09:16 GMT

பீளமேடு போலீஸ் ஸ்டேஷன் முன், பா.ஜ.க வினர் திரண்டதால், பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி தி.மு.க எம்.பி ஆ.ராசாவை பேசிய கோவை பா.ஜ.க மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமியை, பீளமேடு போலீசார் கைது செய்தனர். இந்து முன்னணி சார்பில், எம்.பி  ஆ.ராசாவிற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக நடந்த பொதுக் கூட்டத்தில், ஆ. ராசா குறித்து பா.ஜ.க மாவட்ட தலைவர் மேடையில் பேசினார்.

இரண்டு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் அவர் பேசியதாக, வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆனது. இந்நிலையில், இரு தரப்பினரிடையே வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக, பா.ஜ.க மாவட்ட தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் சார்பில் கோவை பீளமேடு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.


இதையடுத்து, பா.ஜ.க மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமியை பீளமேடு போலீசார், அழைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். பின்னர், அவர் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அவர் மீது கலவரத்தை தூண்டுதல், ஒரு நபரை வேண்டுமென்றே அவமதித்தல், அவதூறு பரப்புதல் ஆகிய மூன்று பிரிவுகள் கீழ் IPC 153, 504, 505 வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பா.ஜ.க மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி, 15 நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டார்.

பீளமேடு போலீஸ் ஸ்டேஷன் முன்பு, பா.ஜ.க வினர் கூடியதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. தொண்டர்கள் சாலைமறியல் செய்ததால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது , போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக அங்கு இருந்து அப்புறப்படுத்தினர். நடுரோட்டில், பேனர்களை தீயிட்டு கொளுத்தியதால், சிறிது நேரம் அங்கு பதட்டமான சூழல் நிலவியது 50 க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

Similar News