திமுக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் அடக்குமுறையை கைவிட வேண்டும் : வானதி சீனிவாசன் கோரிக்கை!
அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் திமுக அரசின் அடக்குமுறைக்கு எனது வலுவான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்
பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்ட மன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “உலக பத்திரிகை சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட செய்தியில், "கௌரி லங்கேஷ், கல்புர்கி போன்ற பத்திரிகையாளர்களின் கொலைகள், சித்திக் கப்பன், ராணா அய்யூப் போன்ற பத்திரிக்கையாளர்களுக்கு மிரட்டல் என அதிகாரத்திற்கு எதிராக உண்மையை பேசத் துணிந்தவர்கள் பலரும் பாஜக ஆட்சியில் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர். பத்திரிகையாளர்கள் அச்சமின்றி, அடக்குமுறை, தணிக்கையின்றி பணியாற்றுவதை உறுதிப்படுத்துவோம்" என்று கூறியுள்ளார்.
கொஞ்சமாவது மனசாட்சி இருந்தால் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இது போன்ற செய்தியை வெளியிட்டிருக்க மாட்டார். ஏனெனில், கடந்த 2021 மே 7-ம் தேதி திமுக அரசு பொறுப்பேற்றது முதல், திமுக அரசின் அதிகார துஷ்பிரயோகத்தையும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அவரது மகன் அமைச்சர் உதயநிதியின் செயல்பாடுகளையும் விமர்சித்து சமூக ஊடகங்களில் பதிவிடுபவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர். திமுக அரசை விமர்சிப்பவர்களை, நள்ளிரவில் சுவர் ஏறி குதித்து கைது செய்வது, வெளிமாநிலங்களுக்கு விமானத்தில் சென்று கைது செய்வது, 500, 600 கிலோ மீட்டர் காவல்துறை வாகனத்தில் அலைக்கழிப்பது, ஒரு வழக்கில் ஜாமீன் கிடைத்தால் உடனடியாக அடுத்த வழக்கில் கைது செய்வது என்று அடக்குமுறைகளில் திமுக அரசு ஈடுபட்டு வருகிறது. திமுக ஆட்சியில் காவல்துறையின் முதன்மை பணியாக இதுதான் மாறி இருக்கிறது.
திமுக அரசின் இந்த அடக்குமுறைகளால் அதிகம் பாதிக்கப்பட்டது பாஜக தொண்டர்களும், நிர்வாகிகளும்தான். திமுக அரசின் அடக்குமுறைகளை, ஜனநாயக விரோத செயல்பாடுகளை கண்டித்து சமூக ஊடகங்களில் பதிவிட்ட பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கடந்த மூன்று ஆண்டுகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் பலரை காவல்துறையினர் கடும் அடக்குமுறைக்கு ஆளாக்கியுள்ளனர். பதிப்பாளர், எழுத்தாளர் பத்ரி சேஷாத்ரி, சமூக ஊடகங்களில் திமுக அரசின் தவறுகளை மக்களிடம் அம்பலப்படுத்தி வரும் மாரிதாஸ் என்று திமுக அரசு அடக்குமுறைக்கு ஆளானவர்களின் பட்டியல் நீண்டு கொண்டு செல்கிறது.
சவுக்கு சங்கர் திமுகவைவிட பாஜகவை மிக மிகக் கடுமையாக விமர்சிப்பவர். பாஜக தலைவர்களைப் பற்றி கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். மத்தியில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியில் இருந்தபோதும் அதை ஜனநாயக வழியிலேயே பாஜக எதிர்கொண்டு வருகிறது. ஆனால் சவுக்கு சங்கர் திமுகவை கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்ததும் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். பெண் காவலர்களை அவதூறாகப் பேசியதற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை கூறியுள்ளது. சமூக ஊடகங்களில் பெண்களை குறிப்பாக அரசியலில் இருக்கும் பெண்களை அவதூறாகப் பேசுவது தொடர்ச்சியாக நடந்து வருகிறது. அது குறித்து காவல்துறையில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. ஆனால், திமுக அரசை தொடர்ச்சியாக விமர்சிப்பவர்கள் மட்டும் கைது செய்யப்படுகிறார்கள். அதற்கு இது போன்ற காரணங்கள் கூறப்படுகின்றன. திமுக அரசை எதிர்ப்பவர்கள் மட்டுமே கைது செய்யப்படுகிறார்கள்.
இப்படி அரசை விமர்சிப்பவர்களை எல்லாம் கைது செய்துவிட்டு பத்திரிக்கை சுதந்திரம் பற்றி மற்றவர்களுக்கு பாடம் எடுக்க முதல்வர் ஸ்டாலினுக்கு கொஞ்சமும் கூச்சமாக இல்லையா? கருத்து சுதந்திரம், பத்திரிகை சுதந்திரம், ஜனநாயகம், பேச்சு, எழுத்து சுதந்திரம் பற்றி திமுகவினர் வாய் கிழிய பேசுவார்கள். ஆனால், ஆட்சி அதிகாரம் கைக்கு வந்ததும் திமுக அரசு விமர்சிப்பவர்களை காவல்துறையை ஏவிவிட்டு கொடுமைப்படுத்துவார்கள். இதுதான் காலங்காலமாக நடந்து வருகிறது. முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட பத்திரிகை சுதந்திர தின செய்தியை கண்ணாடி முன்பு நின்று அவர் திரும்ப திரும்ப படித்துப் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போதாவது அவர் தனது அடக்குமுறை செயல்பாடுகளை கைவிட்டு, ஜனநாயக வழிக்கு திரும்ப வாய்ப்புள்ளதா என்று பார்ப்போம். அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் திமுக அரசின் அடக்குமுறைக்கு எனது வலுவான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.