கோவையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை: மரக்கன்றுகள் வழங்கிய தமுமுக
தமுமுக சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை வேண்டி சிறப்பு தொழுகை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.;
தமிழகம் முழுவதும் தற்போது கோடை வெயில் வாட்டி எடுத்து வருகின்றது. நாளுக்கு நாள் மிக கடுமையாக வெயிலின் தாக்கம் அதிகரித்து இருப்பதோடு, வெப்ப சலனம் எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகமாக காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கையை வாழ முடியாத அளவுக்கு வெப்பம் அதிகமாக இருந்து வருகிறது. இதில் கோவை மாவட்டமும் தப்பவில்லை. 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையை தொடும் மாவட்டங்களில் கோவையும் இருந்து வருகிறது. மேலும் ஆறுகள், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகள் வறண்டு காணப்படுகிறது. பல்வேறு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
இந்த நிலையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் இஸ்லாமிய பிரச்சார சபை சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை வேண்டி சிறப்பு தொழுகை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை கரும்புக்கடை சாரமேடு பகுதியில் இன்றைய தினம் சிறப்பு தொழுகை நிகழ்வு நடத்தப்பட்டது. இதில் 500 க்கும் மேற்பட்டோர் கலந்து இறைவனை வழிபட்டனர்.
மௌலவி யூனுஸ் ஃபிர்தெளசி இந்த சிறப்பு தொழுகையை நடத்தினார். மழை வேண்டி சிறப்பு தொழுகை நிகழ்வு நடத்தப்பட்ட பின்னர், அதில் கலந்து கொண்டவர்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது. எந்த சூழலிலும் நமக்கு தேவையானதை இறைவனிடம் பிரார்த்தனை செய்து பெற வேண்டும் என்று நபி அவர்களின் பொன்மொழிகளின் படி, தற்போது ஏற்பட்டு இருக்கின்ற வெப்பச் சலனத்தில் இருந்து பருவநிலை மாற்றம் அடைந்து மழை பொழிந்திட வேண்டும் என தொழுகை நடத்தியதாக அவ்வமைப்பினர் தெரிவித்தனர்.