பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை பிடித்த கோவை
கடந்தாண்டு 97.57 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்ற நிலையில், இந்தாண்டு 0.6 சதவீத தேர்ச்சி குறைந்துள்ளது.;
தமிழ்நாட்டில் இன்று 12 வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் திருப்பூர் 97.45 சதவீதம் பெற்று முதல் இடத்தையும், ஈரோடு மாவட்டம் 97.59 சதவீதம் பெற்று 2 ஆம் இடத்தையும், அரியலூர் மாவட்டம் 97.25 சதவீதம் பெற்று மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம் 96.97 சதவீதம் பெற்று நான்காம் இடத்தை பிடித்துள்ளது. கடந்தாண்டு 97.57 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்ற நிலையில், இந்தாண்டு 0.6 சதவீத தேர்ச்சி குறைந்துள்ளது.
கோவை மாவட்டத்தில் பனிரெண்டாம் வகுப்பு தேர்வை 33 ஆயிரத்து 399 பேர் எழுதியுள்ளனர். அதில் மாணவர்கள் 15107 பேரும், மாணவிகள் 18,292 பேரும் இத்தேர்வை எழுதியுள்ளனர். தேர்வு எழுதியதில் 32,387 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் மாணவர்கள் 14,459 பேரும், மாணவிகள் 17928 பேரும் எழுதியுள்ளனர். வழக்கம் போல மாணவர்களை விட மாணவிகள் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி எண்ணிக்கை 95.71 சதவீதமாகவும், மாணவிகள் தேர்ச்சி எண்ணிக்கை 98.01 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது.
கோவை மாவட்டத்தில் 118 அரசுப் பள்ளிகளை சேர்ந்த 10 ஆயிரத்து 770 மாணவ, மாணவிகள் பொதுத்தேர்வு எழுதினர். அதில் 10 ஆயிரத்து 53 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதிலும் மாணவர்களை காட்டிலும், மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 89.43 சதவீதமாகவும், மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 95.76 சதவீதமாகவும், அரசுப்பள்ளிகளின் மொத்த தேர்ச்சி விகிதம் 93.34 சதவீதமாகவும் உள்ளது. கடந்த ஆண்டும் கோவை நான்காம் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.