வாட்டும் வெயிலில் இருந்து தப்பிக்க வாகன ஓட்டிகளுக்காக பசுமை பந்தல்

வாட்டும் வெயிலில் இருந்து தப்பிக்க வாகன ஓட்டிகளுக்காக கோவை மாநகராட்சி சார்பில் பசுமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

Update: 2024-05-03 09:58 GMT

கோவையில் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள பசுமை பந்தல்.

தமிழகம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.  100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பல்வேறு மாவட்டங்களில் வெயில் பதிவாகி மக்களை வாட்டி வதைத்து வருகிறது. கோவை மாவட்டத்திலும் கடந்த சில தினங்களாகவே 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயிலானது பதிவாகி வருகிறது. பல்வேறு பகுதிகளில் நீர் நிலைகள் வறண்டு காணப்படுகிறது. மேலும் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. வெயிலில் இருந்து தற்காத்து கொள்வதற்கு அரசு மற்றும் மருத்துவர்கள் பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கி வருகின்றனர். குறிப்பாக வெயில் அதிகம் உள்ள மதிய நேரங்களில் பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர், நீர் மோர் பந்தல்களில் மக்கள் தாகம் தணித்து வருகின்றனர். வெயிலில் குறிப்பாக வாகன ஓட்டிகள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மாநகராட்சி பகுதிகளில் வெயில் அதிகமாக இருக்கக்கூடிய சிக்னல்களில் வாகன ஓட்டிகளுக்காக பசுமை பந்தல் அமைக்கும் பணியை துவக்கி உள்ளது.

கோவை- மேட்டுப்பாளையம் சாலையில் கண்ணப்பன் நகர் சிக்னலில் முதல் கட்டமாக இந்த பசுமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 10 இடங்களில் பசுமை பந்தல் அமைக்க உள்ளதாகவும், தேவைக்கேற்ப பல்வேறு பகுதிகளில் இதனை விரிவுபடுத்த உள்ளதாகவும் மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க இந்த பசுமை பந்தல் உதவிகரமாக இருக்கும் எனவும் இரு சக்கர வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News