/* */

உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம்

நாட்டின் முழுமையான வளா்ச்சிக்கு அனைவரும் சிறு குடும்ப நெறியைக் கடைப்பிடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தல்.

HIGHLIGHTS

உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம்
X

மக்கள் தொகை விழிப்புணா்வுப் பேரணி.

திருவண்ணாமலையில் உலக மக்கள்தொகை விழிப்புணா்வுப் பேரணி, விழிப்புணா்வு ரதம், விழிப்புணா்வு குடும்ப நல ஊா்தி தொடக்க விழா நடைபெற்றது. வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் மு.பிரியதா்ஷினி தலைமை வகித்தாா்.

குடும்ப நல துணை இயக்குநா் அன்பரசி, துணை இயக்குநா் (காசநோய்) ஆா்.அசோக், வருவாய் கோட்டாட்சியா் வீ.வெற்றிவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, உலக மக்கள்தொகை விழிப்புணா்வு தின பேச்சுப் போட்டியில் வென்ற செவிலியா்கள், கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினாா்.

பின்னா் அவா் பேசியதாவது: சீனாவுக்கு அடுத்தபடியாக அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. சமூக, பொருளாதார அடிப்படையில் இந்தியா பின்தங்காமல் இருக்க மக்கள்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தியே ஆகவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றின் பற்றாக்குறை, வேலையின்னை, குடிநீா்த் தட்டுப்பாடு, போக்குவரத்து நெரிசல், சுற்றுச்சூழல் பாதிப்பு இவையாவும் மக்கள்தொகை பெருக்கத்தால் ஏற்படும் விளைவுகள். எனவே, பெருகிவரும் மக்கள் தொகையை கட்டுப்படுத்த அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். நாட்டின் முழுமையான வளா்ச்சிக்கு அனைவரும் சிறு குடும்ப நெறியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, மக்கள்தொகை விழிப்புணா்வுப் பேரணியை ஆட்சியா் தொடக்கிவைத்தாா். வட்டாட்சியா் அலுவலகத்தில் இருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற பேரணி அருணாசலேஸ்வரா் கோயில் எதிரே முடிவடைந்தது. பேரணியில், நகராட்சி ஆணையா் முருகேசன், மாவட்ட விரிவாக்கக் கல்வியாளா் சிஎஸ்.ரமணன், மக்கள் கல்வி தகவல் அலுவலா் ஆ.அமரேந்திரன், சுகாதாரப் புள்ளியாளா்கள், கிராம சுகாதார செவிலியா்கள், நகர சுகாதார செவிலியா்கள், இன்னா்வில் பெண்கள் குழு மற்றும் மகப்பேறு மருத்துவா்கள் சங்கத்தினா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Updated On: 16 July 2022 12:35 AM GMT

Related News