55 ஆயிரம் ஏக்கர் பாசன வசதிக்காக, அமராவதி அணையில் 28 வரை நீர் திறப்பு
![55 ஆயிரம் ஏக்கர் பாசன வசதிக்காக, அமராவதி அணையில் 28 வரை நீர் திறப்பு 55 ஆயிரம் ஏக்கர் பாசன வசதிக்காக, அமராவதி அணையில் 28 வரை நீர் திறப்பு](https://www.nativenews.in/h-upload/2023/02/10/1657954--.webp)
அமராவதி அணை (கோப்பு படம்)
உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை வாயிலாக திருப்பூர், கரூர் மாவட்டத்தில் உள்ள 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனம், கல்லாபுரம், ராமகுளம், கொமரலிங்கம், கண்ணாடிபுத்தூர், சோழமாதேவி, கணியூர், கடத்தூர், காரத்தொழுவு ஆகிய 8 ராஜவாய்க்கால் பாசனத்திலுள்ள 7,520 ஏக்கர் நிலங்களுக்கு இரண்டாம் பருவ நெல் சாகுபடிக்கு நீர் வழங்கப்பட்டு வருகிறது. வருகிற 28-ம் தேதி நிறைவு பெற உள்ளது.
அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனத்தில் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் தாராபுரம், கரூர், அரவக்குறிச்சி தாலூகாவில் அலங்கியம் முதல் கரூர் வரை வலது கரையிலுள்ள 10 பழைய வாய்க்கால் பாசனத்துக்கு உட்பட்ட 21 ஆயிரத்து 867 ஏக்கர் நிலங்களுக்கு கடந்த செப்டம்பரில் நீர் திறக்கப்பட்டது. 135 நாட்களில் 70 நாள் திறப்பு, 65 நாட்கள் அடைப்பு என்ற அடிப்படையில் 5,443 கனஅடி நீர் வழங்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டது.
அதே போல் புதிய ஆயக்கட்டு பாசனத்தில் உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் தாலூகாவிலுள்ள 25 ஆயிரத்து 250 ஏக்கர் நிலங்களுக்கும், 2,661 மில்லியன் கனஅடி நீர் வழங்கப்பட்டு பாசன காலம் நிறைவு பெற்றது.
இந்நிலையில், பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள, நெல், கரும்பு மற்றும் நிலைப்பயிர்களான தென்னை உள்ளிட்டவை பயன்பெறும் வகையிலும், கூடுதல் நீர் வழங்க வேண்டும், என பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
அதன் அடிப்படையில், பாசன காலத்தை நீடித்து வருகிற 28-ம் தேதி வரை நீர் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அமராவதி பழைய ஆயக்கட்டு 10 பழைய வாய்க்கால் பாசன நிலங்களில் கதிர் நிலையிலுள்ள நெற்பயிர்களுக்கு வருகிற 28ம் தேதி வரை சம்பா சாகுபடிக்காக பாசன காலம் நீடிப்பு செய்து உரிய இடைவெளி விட்டு 691.20 மில்லியன் கனஅடி நீர் வழங்கப்படுகிறது. அதே போல் பிரதான கால்வாய் பாசன பகுதியிலுள்ள பயிர்களுக்கு வருகிற 28-ம் தேதி வரை 532.22 மில்லியன் கனஅடி நீர் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன் வாயிலாக கரூர், திருப்பூர் மாவட்டத்திலுள்ள 47 ஆயிரத்து 117 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என, அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால், கரூர் மாவட்டம், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பாசன விவசாயிகள் அதிக மகிழ்ச்சியடைந்துள்ளனர். இன்னும் இரண்டு மாதங்களுக்கு, பனி காலமாக பருவநிலை நீடிப்பதால், மழை வாய்ப்பு மிக குறைவாகவே உள்ளது. இதனால், பாசன பயிர்களை காக்கிற வகையில், நீர் திறப்பை இந்த மாத இறுதி வரை நீடித்திருப்பது, விவசாயிகளுக்கு நன்மை அளிப்பதாக அமைந்துள்ளது, குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu