நாமக்கல் கொல்லிமலை அரசு ஐடிஐக்களில் தொழிற்பயிற்சிகளில் சேர விண்ணப்பிக்க அழைப்பு

நாமக்கல் கொல்லிமலை அரசு ஐடிஐக்களில் தொழிற்பயிற்சிகளில் சேர விண்ணப்பிக்க அழைப்பு

பைல் படம்

நாமக்கல் மற்றும் கொல்லிமலை அரசு ஐடிஐக்களில், தொழிற்பயிற்சிகளில் சேர மாணவ மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.

நாமக்கல் மற்றும் கொல்லிமலை அரசு ஐடிஐக்களில், தொழிற்பயிற்சிகளில் சேர மாணவ மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மற்றும் கொல்லிமலையில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் (ஐடிஐ) அமைந்துள்ளது. இங்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. 10ம் வகுப்பு, தேர்ச்சி, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி, தோல்வி அல்லது ஏதாவது ஒரு டிகிரி, டிப்ளமோ பெற்ற மாணவர், மாணவியர் ஐடிஐ பயிற்சியில் சேரலாம். இம்மாதம் 10ம் தேதி முதல் ஜூன் 7ம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நாமக்கல் அரசு ஐடிஐயில் 2 ஆண்டு பயிற்சிகளான எலக்ட்ரீசியன், டிராப்ட்ஸ்மேன் சிவில், மெஷினிஸ்ட், ஓராண்டு பயிற்சியாக மெக்கானிக் ஆட்டோ பாடி ரிப்பேர், பெண்களுக்கு மட்டும் ஓராண்டு பயிற்சியாக கம்ப்யூட்டர் ஆபரேட்டர், புரோகிராமிங் அசிஸ்டென்ட், 2 ஆண்டு பயிற்சியாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணு சாதனங்கள் பராமரிப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

மேலும், 2023 ஆண்டில் புதிதாக துவங்கப்பட்டுள்ள இண்டஸ்டிரி 4.0 திட்டத்தின் கீழ் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய தொழிற்பிரிவுகளான மின்சார வாகன மெக்கானிக், 2 ஆண்டு பயிற்சியாக தொழிற்துறை ரோபோடிக்ஸ் மற்றும் டிஜிட்டல் உற்பத்தி, ஓராண்டு பயிற்சியாக சிஎன்சி இயந்திர தொழில் நுட்ப வல்லுநர்கள் போன்ற தொழிற்பிரிவுகளுக்கு பயிற்சிகள்அளிக்கப்பட உள்ளது. பயிற்சி பெறும் பயிற்சியாளர்களுக்கு பயிற்சியின் போது வேலைவாய்ப்பு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. பயிற்சி முடிந்த பின் கேம்பஸ் இண்டர்வியூ மூலமாக வேலை வாய்ப்பு பெறலாம். அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவ, மாணவியருக்கு பயிற்சிக்காலத்தில் பயிற்சி கட்டணம் முற்றிலும் இலவசம், மாதம் ரூ.750 உதவித்தொகையுடன் விலையில்லா சைக்கிள், பாட புத்தகங்கள், சீருடை, காலணி, வரைபடக்கருவிகள் மற்றும் இலவச பஸ் பாஸ் ஆகியவை வழங்கப்படுகின்றன.

மேலும், 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த பெண் மற்றும் ஆண் பயிற்சியாளர்களுக்கு மாதம் ரூ.1,000 வீதம் அரசு உதவித்தொகை பெறலாம். 10ம் வகுப்புடன் இரண்டாண்டு ஐடிஐ பயிற்சி முடித்தவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை மூலம் 12ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் வழங்கப்படும். ஐடிஐ பயிற்சிகளில் சேர www.skilltraining.tn.gov.in என்ற வெப்சைட் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது நாமக்கல் மற்றும் கொல்லிமலை அரசு ஐடிஐ நிலையங்களுக்கு நேரில் சென்று ரூ. 50 விண்ணப்பக் கட்டணம் செலுத்தி ஜூன் 7ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

மேலும், விண்ணப்பிக்க 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், கொரானா காலத்தில் 10ம் வகுப்பு முடித்திருப்பின் 9ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், ஜாதி சான்றிதழ், ஆதார் அட்டை மற்றும் 5 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ உள்ளிட்ட ஆவணங்கள் தேவை. மேலும் விவரங்களுக்கு 04286-299597, 04286-267876, 94990 55844 என்ற தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story