நாமக்கல் மாவட்டத்தில் ரூ. 90.95 கோடி மதிப்பில் அரசு திட்டப்பணிகள்: கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

திருச்செங்கோடு நகராட்சியில், புதிய கால்நடை மருத்துவமனை கட்டுமானப் பணிகளை, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆசியா மரியம் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அருகில் நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, மல்லசமுத்திரம், பிள்ளாநல்லூர், ராசிபுரம், அத்தனூர், வெண்ணந்தூர், நாமகிரிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் அரசு நலத்திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் உமா முன்னிலையில், தமிழக சிறுபான்மையினர் நலத்துறை கமிஷனர் ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திருச்செங்கோடு நகராட்சியில் ரூ. 90 லட்சம் மதிப்பீட்டில் கால்நடை மருத்துவமனை கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு கட்டுமானத்தின் தரம், ஒப்புதல் அளிக்கப்பட்ட வரைபடத்தின் அடிப்படையில் அறைகள் அமைப்பு, நீளம், அகலம், ஒப்பந்தகாலம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, ரூ. 23 கோடி மதிப்பீட்டில் திருச்செங்கோட்டில், அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு இணையாக அமைக்கப்பட உள்ள புதிய மருத்துவ பிரிவுகள் குறித்தும், ரூ. 4.35 கோடி மதிப்பீட்டில் புதிய வணிக வளாகம், அமையவுள்ள மொத்த கடைகள் எண்ணிக்கை, வாகனங்கள் நிறுத்தும் இடம் வசதி உள்ளிட்ட பணிகளின் தற்போதைய நிலை குறித்தும், ரூ. 4.56 கோடி மதிப்பீட்டில் வையப்பமலை அருள்மிகு சுப்பரமணியசுவாமி திருக்கோயிலுக்கு புதிய சாலை அமைக்கும் பணிகள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வுமேற்கொண்டார்.
மல்லசமுத்திரம் ஊராட்சிஒன்றியம், நாகர்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் ரூ. 24.56 லட்சம் மதிப்பீட்டில் கலையரங்கம் அமைக்கும் பணி, பிள்ளாநல்லூர் டவுன் பஞ்சாயத்து, குருசாமிபாளையத்தில் ரூ. 1.51 கோடி மதிப்பீட்டில் நவீன எரிவாயு தகனமேடை கட்டப்பட்டு வரும் பணி, மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ வசதிகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டார். ராசிபுரத்தில் ரூ. 53.39 கோடி மதிப்பீட்டில் புதிய மாவட்ட தலைமை மருத்துவமனை, அத்தனூர் டவுன் பஞ்சாயத்து, ஆயிபாளையம், கோம்பைகாடு பகுதியில் துர்காதேவி என்பவர் ரூ. 18.75 லட்சம் அரசு மானியத்தில் ரூ. 25 லட்சம் மதிப்பில் செயல்படுத்தி வரும் சிறுதானியங்கள் பதப்படுத்தும் நிறுவனம் குறித்தும், தேங்கல்பாளையம் கிராமத்தில், நீர்வளத்துறை சார்பில், சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் அத்தனூர் பெரிய ஏரியில் வழிந்தோடி வாய்க்கால் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதையும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆசியா மரியம் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வுகளில் டிஆர்ஓ சுமன், டிஆர்டிஏ திட்ட இயக்குனர் வடிவேல், மகளிர் திட்ட இயக்குனர் செல்வராசு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu