காஞ்சி விஷ்ணு தலங்களில் ரத சப்தமி உற்சவம் கோலாகலம்
ரத சப்தமி விழாவையொட்டி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் சூரிய பிரபைவாகனத்தில் எழுந்தருளினார்.
ரத சப்தமி இந்து சமயத்தவர்களால் தை அமாவாசை நாளை அடுத்த ஏழாவது நாளில் கொண்டாடப்படுவதாகும். இது குறிப்பாக சூரிய தேவன் ஏழு குதிரைகள் பூட்டிய தனது ரதத்தை வடகிழக்கு திசையில் திருப்பி பயணிப்பதாக கருதப்படுகிறது.
மேலும், இந்த நாள் சூரியக் கடவுளின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது. சூரியன் தெற்கு நோக்கிய தட்சிணாயனம் பயணத்தை முடித்துக்கொண்டு ரத சப்தமியன்று வடக்கு நோக்கி உத்தராயணம் பயணப்படும் தினமே ரத சப்தமி ஆகும்.
இது பருவங்களின் அடிப்படையில், வசந்த காலத்தின் ஆரம்பமாகவும், அறுவடை காலத்தின் தொடக்கமாகவும் உள்ளது. இந்திய விவசாயிகளூக்கு இந்த நாள் ஒரு புதிய ஆண்டின் தொடக்கமாக உள்ளது. இந்து சமய குடும்பங்களிலும், சூரியக் கடவுள் உள்ள கோவில்களிலும் ரத சப்தமி மிக விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
அவ்வகையில் குறிப்பாக விஷ்ணு ஆலயங்களில் ரதசப்தமி விழா மிகவும் கோலாகலமாக காலை சூரியன் உதிக்கும் நேரத்தில் ஆரம்பித்து சூரியன் மறையும் நேரம் வரை பல்வேறு வாகனங்களை எம்பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
குறிப்பாக திருமலையில் நடைபெறும் விழாவில் காலை 6 மணிக்கு சூரிய உதயம் எம்பெருமான் மீது விழும் நேரத்தில் ரத சப்தமி உற்சவம் தொடங்கி ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை பல்வேறு வாகனங்களில் பிரம்மோற்சவ விழாவில் காணக் கிடைக்காத அனைத்து வாகனங்களிலும் எழுந்தருளி ஒரே நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசிப்பது வழக்கம்.
அவ்வகையில், உலகப் பிரசித்தி பெற்ற அத்தி வரதர் கோவில் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ரதசப்தமி உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
ரதசப்தமி உற்சவத்தை ஒட்டி வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்து சிகப்பு பட்டு உடுத்தி, பச்சை நிற மனேரஞ்சித பூ மாலை, பஞ்சவர்ண மலர் மாலை திருவாபரணங்கள் அணிந்து தங்க சூரிய பிரபை வாகனத்தில் வரதராஜ பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
பின்னர் மேளதாள வாத்தியங்கள் ஒலிக்க, வேத பாராயணம் கோஷ்டியினர் பாடிவர மாடவீதிகளில் திருவீதி உலா வந்தார். சூரிய பிரபை வாகனத்தில் வீதி உலா வந்த வரதராஜ பெருமாளுக்கு வழிநெடுகிலும் திரளான பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து வணங்கி வழிபட்டு சென்றனர்.
இதே போல் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து பெருமாள் ஆலயங்களிலும் ரதசப்தமி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu