ஈரோடு கிழக்குத் தொகுதியில் கூடுதலாக 568 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சுழற்சி முறையில் செய்து ஒதுக்கீடு செய்யும் பணி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் வேட்பாளர்கள் முன்னிலையில் நடந்த போது எடுத்த படம்.
ஈரோடு கிழக்குத் தொகுதியில் கூடுதலாக 568 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சுழற்சி முறை மூலம் ஒதுக்கீடு செய்யும் பணி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (ஜன.25) நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தால், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான கால அட்டவணை அறிவிக்கப்பட்டு,வரும் பிப்ரவரி 5ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதையொட்டி, வாக்குப்பதிவிற்காக 237 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த 13ம் தேதி இந்திய தேர்தல் ஆணைய அறிவுரையின்படி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு கணினி முறையில் ஆணைய இணையதளத்தின் மூலம் 284 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 284 கட்டுப்பாட்டு அலகு, 308 விவிபெட் இயந்திரங்கள் கணினி சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, தேர்தல் களத்தில் 46 வேட்பாளர்கள் உள்ளதால், இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலம் கணினி துணை சுழற்சி முறையில் கூடுதலாக 568 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் வேட்பாளர்கள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் ஈரோடு மாநகராட்சி ஆணையர் எச்.எஸ்.ஸ்ரீகாந்த், மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்த குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி, துணை ஆட்சியர் (பயிற்சி) சிவபிரகாசம், வட்டாட்சியர் (தேர்தல்) சிவசங்கர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தியாகராஜ் உட்பட தொடர்புடைய தேர்தல் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu