பெருந்துறை சிப்காட் நல்லா ஓடையில் ஆன்லைன் டிடிஎஸ் மீட்டர் அமைப்பதற்கான பணியை துவக்கி வைத்த அமைச்சர்
பெருந்துறை சிப்காட் நல்லா ஓடையில் ஆன்லைன் டிடிஎஸ் மீட்டர் அமைப்பதற்கான பணியினை அமைச்சர் முத்துசாமி அடிக்கல் நாட்டி துவக்கி வைத்த போது எடுத்த படம். உடன், ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா உள்ளிட்ட பலர் உள்ளனர்.
பெருந்துறை வட்டம் சிப்காட் தொழில் வளர்ச்சி மையம், நல்லா ஓடையில் ஆன்லைன் டிடிஎஸ் மீட்டர் அமைப்பதற்கான பணியினை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி இன்று (நவ.22) அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம், சிப்காட் தொழில் வளர்ச்சி மையம், நல்லா ஓடையில் ஆன்லைன் டிடிஎஸ் மீட்டர் அமைப்பதற்கான பணியினை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். சுற்றுச்சூழல் பாதிப்புகளை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்துள்ள நிலையில், கசிவு நீராக வெளிப்பட்டு வரும் ஏற்கனவே மாசடைந்த நிலத்தடி நீரினை முற்றிலும் அகற்றி, சுத்திகரிப்பு செய்வதன் மூலமாக மட்டுமே சரிசெய்யப்படும் என்பதனை கருத்தில் கொண்டு, கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் 20ம் தேதி பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டது.
அதனை தொடர்ந்து சிப்காட் நிர்வாகத்தினால் கடந்த செப்டம்பர் மாதம் 30ம் தேதி ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டது. ஏற்கனவே நல்லா ஓடையில் கசிவுநீரில் கலந்துள்ள உப்பின் அளவீடு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், இது தொடர்பாக வெளிப்படை தன்மை மற்றும் பொதுமக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள ஏதுவாக ஆன்லைன் டிடிஎஸ் மீட்டர் அமைப்பது தொடர்பாக பொதுமக்கள் மற்றும் கூட்டமைப்புகளின் பிரதிநிதிகள் (பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச்சங்கம்) சார்பாக பல்வேறு மனுக்கள் பெறப்பட்டது.
இதைத்தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதம் 7ம் தேதி நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் ஆன்லைன் டிடிஎஸ் மீட்டர் அமைப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டு, சிப்காட்டின் இறுதியில் அமைந்துள்ள 6-வது குறுக்கு சாலை பகுதியில் உள்ள பாலத்தின் வழியாக வெளியேறும் கசிவுநீரில் கலந்துள்ள உப்பின் அளவை தொடர்ந்து ஆன்லைன் மீட்டர் மூலமாக கண்காணிக்கவும், இது குறித்து வெளிப்படை தன்மையாக பொதுமக்கள் அறியவும் ஆன்லைன் டிடிஎஸ் மீட்டர் அமைக்க மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு முடிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, விலைப்புள்ளி பட்டியல் பெறப்பட்டு ரூ.2.82 லட்சம் திட்ட மதிப்பீட்டில் ஆன்லைன் டிடிஎஸ் மீட்டர் அமைக்க கடந்த 13ம் தேதி நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, சிப்காட் நல்லா ஓடையில் ஆன்லைன் டிடிஎஸ் மீட்டர் அமைக்க வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்து. ஒரு மாத காலத்திற்குள் முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, சென்னிமலை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் காயத்திரி இளங்கோ, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் சுவாமிநாதன். உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் வினோத் குமார், உதவி பொறியாளர்கள் விஷ்ணு பாலா, சுதா (சிப்காட்) உட்பட வருவாய் மற்றும் காவல் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu