ஈரோடு மாவட்டத்தில் 9.01 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை: ஆட்சியர் தகவல்
குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம்.
ஈரோடு மாவட்ட அளவில் அனைத்து அங்கன்வாடி, துணை சுகாதார நிலையங்களில் நாளை 9.01 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் நாளை (பிப்ரவரி 10ம் தேதி) தேசிய குடற்புழு நீக்க தினம் நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, உலக மக்கள் தொகையில் ஏற்படும் குடற்புழு தொற்றில் 25 சதவீதம் பேர் இந்தியாவில் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அதில் தமிழ்நாட்டில் மட்டும் குடற்புழு தொற்று பரவல் 25 சதவீதமாக உள்ளது.
குடற் புழு வகைகளாக உருண்டைப்புழு, கொக்கிப்புழு. சாட்டைப்புழு போன்றவை அறியப்படுகிறது. குடற்புழு தொற்றால் பொதுவாக அறிகுறிகள் இருக்காது. ஆனால் கடுமையாக தொற்று ஏற்பட்டு இருப்பின் வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு, பசியின்மை, பலவீனம் போன்ற அறிகுறிகள் தென்படும்.
இந்த குடற்புழுக்கள் குடலில் இருந்து கொண்டு சாப்பிடுகின்ற உணவில் உள்ள இரும்புசத்து, ஊட்டச்சத்து, வைட்டமின் போன்ற சத்துக்களை எடுத்துக் கொண்டு வளர்கிறது. ஆகவே இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரத்த சோகை நோய், ஊட்டச்சத்து, விட்டமின் ஏ சத்து மற்றும் உடல் வளர்ச்சி குறைபாடுகள் ஏற்படுகிறது.
இதனை, தடுக்கும் நோக்கமாக தேசிய குடற் புழு நீக்க தினம் வருடத்தில் இருமுறை நடத்தப்படுகிறது. இதனை ஒட்டி நடைபெறுகின்ற குடற்புழு நீக்க தின சிறப்பு முகாம்களில் குடற்புழுவை அழிக்கும் பொருட்டு அல்பெண்டாசோல் மாத்திரைகள் 1 முதல் 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 200 மில்லி கிராம் அளவிலும், 2 முதல் 19 வயது வரை உள்ளவர்களுக்கு 400 மில்லி கிராம் அளவிலும், 20 வயது முதல் 30 வயது வரை உள்ள பெண்களுக்கு, (கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தவிர்த்து) 400 மில்லி கிராம் அளவில் ஒரே தவணையில் வழங்கப்படுகிறது.
அந்த வகையில், ஈரோடு மாவட்டத்தில் நாளை 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு 2,080 அங்கன்வாடி மையங்கள் மற்றும் 311 துணை சுகாதார நிலையங்களிலும், 1,410 அரசு பள்ளிகள். 329 தனியார் பள்ளிகள் மற்றும் 63 கல்லூரிகளில் பயிலும் 19 வயது வரை உள்ள 7,25,892 மாணவ மாணவியர்களுக்கும் 20 முதல் 30 வயது வரை உள்ள பெண் பயனாளிகள் 1,75,531 நபர்களுக்கும் என மொத்தம் 9,01,423 பேருக்கு 3,455 பணியாளர்களைக் கொண்டு தேசிய குடற்புழு நீக்க தின சிறப்பு முகாம்கள் மூலம் அல்பெண்டாசோல் மாத்திரைகள் வழங்கப்படவுள்ளது.
மேலும், விடுபட்டவர்களுக்கு வரும் 17ம் தேதியன்று மாத்திரைகள் வழங்கபடவுள்ளது. குடற்புழு தொற்றை தடுத்திட திறந்த வெளியில் மலம் கழிப்பதை தவிர்ப்பது. கழிவறையை பயன்படுத்துவது. வெளியில் செல்லும் போது காலணிகளை அணிந்து செல்வது, சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்வது, காய்கறி பழங்களை நன்றாக கழுவிய பின் உட்கொள்வது. சுகாதாரமான குடிநீர், உணவை உட்கொள்வது, உணவுக்கு முன். கழிவறைக்கு சென்று விட்டு வந்த பின் கைகளை சோப்பு போட்டு கழுவுவது போன்ற முறைகளை மேற்கொள்வது நல்லது.
எனவே, குடற்புழு நீக்க தின சிறப்பு முகாம்களில் தங்கள் பகுதிக்கு அருகில் நடைபெறும் இடங்களில் குழந்தைகள், மாணவ, மாணவியர்கள் மற்றும் 20 முதல் 30 வயது வரை உள்ள பெண்கள் அல்பெண்டாசோல் மாத்திரைகளை வாங்கி உட்கொண்டு பயனடையுமாறு அதில் கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu