தமிழகத்தில் புதிய மின் இணைப்பு வாங்க போறீங்களா..? அப்ப உங்களுக்கான செய்தி..!
மின் இணைப்புகள் (கோப்பு படம்)
தமிழ்நாட்டில் வீடுகள் அல்லது வணிக நிறுவனங்களுக்கு புதிய மின் இணைப்பு வழங்கும் போது, பாதி துாரம் கேபிள், பாதி துாரம் கம்பம் வழியாக மின் வினியோகம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால், அதற்கு தகுந்தாற்போல் தனித்தனி வளர்ச்சி கட்டணம் வசூலிக்க வேண்டும்' என மின் வாரியத்திற்கு, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கடிதம் எழுதி இருக்கிறதாம்.
தமிழ்நாடு மின்வாரியத்தை பொறுத்தவரை பெரும்பாலும், அதாவது பல்வேறு நகரங்களில் மின் கேபிள்கள் கம்பம் வழியாகவே செல்கின்றன. அதேநேரம் சென்னையின் பெரும்பாலான இடங்களிலும் கோவை, திருநெல்வேலி உள்ளிட்ட முக்கியமான சில நகரங்களில் சில இடங்களில் தரைக்கு அடியிலும், மின் கேபிள்கள் செல்கின்றன.
தமிழ்நாட்டில் புதிய மின் இணைப்பு வழங்கும் போது, வைப்புத்தொகை, வளர்ச்சிக் கட்டணம் போன்றவற்றை உள்ளடக்கிய பல்வகை கட்டணம் வசூலிக்கப்படுவது வழக்கம். சென்னை போன்ற நகரங்களில் கேபிள் வாயிலாக மின் வினியோகம் செய்ய அதிக செலவாகும். அதேநேரம் மின் கம்பம் வாயிலாக புதிய மின் இணைப்பு தருவதற்கு செலவு குறைவாகவே ஆகும்.
இதன் காரணமாகவே புதிதாக மின் இணைப்புக்கு விண்ணப்பிக்கும் போது, தரைக்கு அடியில் கேபிள் உள்ள இடங்களில் வளர்ச்சி கட்டணம் அதிகமாகவும்; கம்பம் உள்ள இடங்களில் குறைவாகவும் வசூலிக்கப்படுவது வழக்கமாக உள்ளது. அதன்படி மின்கம்பம் உள்ள இடங்களில் வீட்டிற்கு மும்முனை பிரிவில் (3 பேஸ் கரெண்ட்) வளர்ச்சி கட்டணம், கிலோ வாட்டிற்கு, 2,045 ரூபாயாக உள்ளது. இதுவே, கேபிள் உள்ள பகுதிகளில், 5,110 ரூபாய் ஆகும். அதேநேரம் சென்னையில் சில இடங்களில் பாதி கேபிள் வாயிலாகவும், மீதி மின்கம்பம் வாயிலாகவும் மின்சாரம் வினியோகம் செய்யப்படும் நிலை இருக்கிறது.
அந்த இடங்களில் மின் இணைப்புக்கு விண்ணப்பிக்கும் இடத்தில், முழுவதும் கேபிளுக்கு உரிய வளர்ச்சிக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால், அதிக செலவு ஏற்படுவதால் விண்ணப்பதாரர்கள் பாதிக்கப்படும் நிலையே நீடிப்பதாக சொல்லப்படுகிறது..
இந்த பிரச்சனை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதுபற்றி விசாரித்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம், 'புதிய மின் இணைப்பு வழங்கும் போது, ஒரு இடத்தில் பாதி கேபிள், பாதி கம்பத்தில் வினியோகம் செய்ய வேண்டி இருந்தால், அதற்கு ஏற்ப தனித்தனி வளர்ச்சிக் கட்டணம் வசூலிக்க வேண்டும்' என்று தமிழக மின் வாரியத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.
மேலும், மின் கம்பத்தில் மின்சாரம் வழங்கி, கேபிளுக்கு உரிய வளர்ச்சிக் கட்டணம் வசூலித்திருந்தால், திரும்ப வழங்க வேண்டும்' என்று மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வலியுறுத்தி உள்ளது. மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் இந்த அறிவிப்பு புதிதாக மின் இணைப்பு வாங்குவோருக்கு மிகப்பெரிய நன்மையாக இருக்கும் என்கிறார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu