அனில் சவுகான், முப்படைகளின் தலைமை தளபதியானது எப்படி?
முப்படை தளபதி அனில் சவுகான்
இந்திய முப்படைகளுக்கு இடையே ஒரு ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் நோக்கில் தலைமை தளபதி பதவியை உருவாக்க வேண்டிய தேவை கார்கில் போருக்குப்பின் உணரப்பட்டது. அதன்படி இந்திய முப்படைகளையும் நிர்வகிக்க முப்படை தலைமை தளபதியை தற்போதைய மத்திய அரசு உருவாக்கியது.
நாட்டின் முதல் முப்படை தலைமை தளபதியாக பிபின் ராவத் கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் பொறுப்பேற்றார். ஆனால் கெடுவாய்ப்பாக, கடந்த ஆண்டு டிசம்பர் 8-ந்தேதி ஊட்டி அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் அவர் உயிரிழந்தார்.இதனால் முப்படைகளின் தலைமை தளபதி பதவிக்கு யாரையும் நியமிக்காமல் காலியாகவே இருந்தது. இந்த பதவிக்கு சுமார் 10 மாதங்களுக்குப்பின் தற்போது புதிய அதிகாரியை மத்திய அரசு நியமித்து உள்ளது.
முப்படை தலைமை தளபதியாக பிபின் ராவத்திற்கு பின்னர் முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக லெப்டினென்ட் ஜெனரல் அனில் சவுகான் நியமிக்கப்பட்டு இருக்கிறார். இவர், ராணுவத்தில் பல நிலைகளில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். பொதுவாக முப்படைகளில் ஏதாவது ஒரு படையின் தலைமை தளபதியாக இருக்கிறவர்களுக்கே முப்படைகளின் தலைமை தளபதி பதவி வழங்கப்பட வேண்டும். அந்த அடிப்படையில்தான் இதற்கு முன்பு பிபின் ராவத் பணியமர்த்தப்பட்டார்
இதன்படி அவருக்கு அடுத்தாக, ராணுவ தளபதியாக இருந்த எம்.எம். நரவனே தான் புதிய தலைமை தளபதி ஆவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரை மத்திய அரசு நியமிக்காமல் ராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற அனில் சவுகானுக்கு முப்படைகளின் தலைமை தளபதி பதவி வழங்கப்பட்டு இருக்கிறது. இது மிகவும் அசாதாரணமான நியமனம் என கூறப்படுகிறது.
ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றாலும் அவர் 62 வயதை பூர்த்தி அடையாதவராக இருந்ததால், லெப்டினெட் ஜெனரல் அல்லது ஜெனரல் பணி நிலையில் ஓய்வு பெற்றிருந்ததால் அவரை முப்படைகளின் தலைமை தளபதியாக நியமிக்கலாம் என கடந்த ஜுன் மாதம் விதியில் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது. அதாவது இவருக்காகவே அந்த நியமன விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு இருப்பதாகவும் பலர் கூறுகின்றனர்.
இதன்படியே அனில் சவுகான் புதிய பதவியில் அமர்த்தப்பட்டு உள்ளார். இவர் கடைசியாக கிழக்கு பிராந்திய ராணுவ தளபதியாக பதவி வகித்து கடந்த ஆண்டு மே மாதம் ஓய்வு பெற்றார். இவர் ராணுவ சேவையில் தற்போது உள்ள பிற படைகளின் தலைமை தளபதிகளை விட மூத்தவர் என்பதால் இந்த பதவி அவருக்கு தகும் என ராணுவ அதிகாரிகள் பலர் கூறுகிறார்கள். மேலும், இவர் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜய் தோவலுடன் பணியாற்றியவர் என்பதாலும், ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு இந்தியாவில் ஏற்பட்ட கிளர்ச்சிகளை அடக்கியதில் திறம்பட பங்காற்றியவர் என்பதாலும் இந்த உயரிய பொறுப்பு அவருக்கு கிடைத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இவரும், மறைந்த முன்னாள் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தும் உத்தகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இருவரும் ஒரே படைப்பிரிவில், கூர்க்கா அலகு 11ல் பணியாற்றி உள்ளனர். இதுபோன்ற காரணங்களாலேயே அனில் சவுகான், ஓய்வு பெற்ற பிறகும் அவருக்கு தலைமைப் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. இவர் முப்படைகளின் தலைமை தளபதியாக மட்டுமின்றி, பாதுகாப்பு மந்திரியின் ராணுவ ஆலோசகர், அணு ஆயுதக்கட்டளை ஆணையத்தின் ஆலோசகர் போன்ற பொறுப்புகளையும் வகிப்பார்.
அக்டோபர் மாதம் குஜராத்தில் நடைபெற உள்ள பாதுகாப்பு கண்காட்சியில் முப்படைத் தலைமை தளபதியின் தேவை அவசியம் எனக் கருதி இந்த நியமனம் செய்யப்பட்டு உள்ளதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu