/* */

சினிமா துறையில் வரலாறு படைத்த சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ்: அன்றும், இன்றும்

Modern Theatres Salem- தமிழக சினிமா வரலாற்றில் முன்னாள் முதல்வர்கள் மூன்று பேர்களம் கண்ட இடம் மாடர்ன் தியேட்டர்ஸ். அந்த காலத்திலேயே நவீன தொழில்நுட்பத்தினை சினிமாவில் அறிமுகப்படுத்திய பெருமை இயக்குனர் டி.ஆர்.சுந்தரத்தினைச் சாரும்.

HIGHLIGHTS

சினிமா துறையில்  வரலாறு படைத்த   சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ்: அன்றும், இன்றும்
X

அன்றைய மாடர்ன் தியேட்டர்ஸின் முகப்பு  மட்டும் இன்றும் நினைவுச்சின்னமாக உள்ளது. (கோப்புபடம்)



சேலம் மாடர்ன் தியேட்டர்ஸின் உரிமையாளர் டிஆர்எஸ் என்றழைக்கப்படும் டி.ஆர்.சுந்தரம் (கோப்பு படம்)

மாடர்ன் தியேட்டர்ஸ் லிமிடெட் (MODERN THEATERS LTD) 1935 ம் ஆண்டில் தமிழ்நாட்டின் சேலத்தில் திருச்செங்கோடு ராமலிங்கம் சுந்தரம் (டிஆர்எஸ்) துவக்கிய திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் ஆகும். தென் இந்தியாவின் முதன் முதலாக உருவாக்கப்பட்ட பெரிய திரைப்படக்கூடம் இதுவே. சென்னை போன்ற பெரிய நகரங்களை விட்டு முதன் முதலாக சேலம் போன்ற வெளிநகரம் ஒன்றில் மாடர்ன் தியேட்டர்ஸ் உருவாக்கப்பட்டது.


அக்கால சினிமாக்களில் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்தபடங்களில் ஒளிபரப்பான டைட்டில் (கோப்பு படம்)

முதன் முதலாக கலர் படம்

மாடர்ன் தியேட்டர்ஸ் திரைப்படக்கூடம் ஒரு காலத்தில் ஆண்டுக்கு மூன்று படங்களையாவது உருவாக்கிக் கொண்டிருந்தது. முதன் முதலாக தென்இந்தியாவில் வண்ணப்படத்தைத் தயாரித்த பெருமையும் மாடர்ன் தியேட்டருக்கு உண்டு. இந்த நிறுவனத்தின் தயாரிப்பு அரங்கில் 1982 ம் ஆண்டு வரை 150 க்கும் மேலான தமிழ், தெலுங்கு மலையாளம், இந்தி, சிங்களம் மற்றும் ஆங்கிலத்திலும் திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை தமிழ்த் திரைப்படங்களே.


உலக அளவில் சினிமாவின் தரத்தினை அறிமுகப்படுத்திய மாடர்ன்தியேட்டர்ஸின் அக்கால முகப்பு தோற்றம் (கோப்பு படம்)உள்படம் : டி.ஆர். சுந்தரம் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர், ஸ்டூடியோ உரிமையாளர்.

டிஆர்எஸ்- டி.ஆர். சுந்தரம்

மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தின் அதிபரான டி.ஆர். சுந்தரம், சேலம் மாவட்டம் திருச்செங்கோட்டில் 1907ம் ஆண்டு ஜூலை மாதம் 16ந்தேதி பிறந்தவர். இவருடைய தந்தை நுாற்பாலைகளில் இருந்து நுாலை வாங்கி மொத்தமாக வியாபாரம் செய்து வந்த வி.வி.சி. ராமலிங்க முதலியார். தாயார் பெயர் கணபதி அம்மாள். இவர்களுக்கு ஐந்தாவது மகனாக டி. ஆ ர். சுந்தரம் பிறந்தார்.

தனது தொடக்கக் கல்வியை சேலத்தில் கற்ற சுந்தரம், சென்னை மாநிலக்கல்லுாரியில் சேர்ந்து பி.ஏ. மற்றும் பி.எஸ்சி பட்டங்கள் பெற்றார். அதன் பிறகு சுந்தரம் இங்கிலாந்து சென்றார். ஜவுளித் தொழிலில் உயர் கல்வி பயின்றார். நுால்களுக்கு வண்ணம் சேர்க்கும் தொழில்நுட்பத்தை கற்றறிந்தார். அங்கு படித்த போதே லண்டனில் டி.ஆர்.சுந்தரத்துக்கும் ,கிளாடிஸ் என்ற பெண்ணுக்கும் நட்பு ஏற்பட்டது. இருவரும் பதிவுத்திருமணம் செய்துகொண்டனர்.


தென்இந்தியாவிலேயே முதன் முதலாக வண்ணப்படத்தினை அறிமுகப்படுத்தியது மாடர்ன்தியேட்டர்ஸ்தான். (கோப்பு படம்)

சினிமா மீதான ஆசை

ஜவுளித்தொழிலில் உயர் படிப்பு படித்த சுந்தரத்துக்கு தன்குடும்பத்தொழிலின் மீது ஆர்வம் ஏற்படவில்லை. சினிமாத்துறை இவரது கவனத்தை ஈர்த்தது. இந்தத் துறையில் காலடி வைக்க ஒரு துணை வேண்டியிருந்தது. லண்டனில் இருந்து அவர் சேலம் திரும்பியபோது (1933ல்)சேலத்தில் 'ஏஞ்சல் பிலிம்ஸ்' என்ற நிறுவனம் திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட்டு வந்தது. திரைப்படத்தொழிலில் ஆர்வம் கொண்ட டி.ஆர். சுந்தரம் ஏஞ்சல் பிலிம்ஸ் அதிபர்களான வேலாயுதம்பிள்ளை, சுப்பராய முதலியார் ஆகியோருடன் கூட்டு சேர்ந்து திரைப்படங்களைத் தயாரித்தார்.

ஸ்டூடியோ துவங்க அச்சாரம்

இந்நிறுவனத்தின் தயாரிப்புகளான திரவுபதி வஸ்திராபரணம் (1934),துருவன் (1935), நல்லதங்காள் (1935),ஆகிய படங்களில் பணிபுரிந்தார். அக்காலத்தில் தமிழ்த் திரைப்படங்களுக்கு மும்பை, கொல்கத்தா போன்ற வட இந்திய நகரங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. டி.ஆர்.சுந்தரம் குழுவினரும் கொல்கத்தா சிசி நகரம் சென்று இரண்டு படங்களை எடுத்தார்கள். இவ்விரண்டு படங்களுமே ஓரளவு நல்ல வருமானத்தைத் தந்தன. ஒவ்வொருமுறையும் கொல்கத்தா செல்ல வேண்டுமா? என்று நினைத்த சுந்தரம் சேலத்தில் தானே ஒரு படத் தயாரிப்பு நிறுவனம் தொடங்க எண்ணினார்.


தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன் நடித்த மாடர்ன் தியேட்டர் படம் அலிபாபாவும் 40 திருடர்களும் (கோப்பு படம்)

ஏற்காடுமலைஅடிவாரம்

சேலம் ஏற்காடு மலைஅடிவாரத்தில் 10 ஏக்கர் நிலத்தினை டி.ஆர்.சுந்தரம் வாங்கினார். வளாகத்தினுள் நுழைந்தால் அங்கேயே முழுப்படத்தையும் தயாரிக்கக்கூடிய வசதிகள் அனைத்தும் இருக்க வேண்டும் என்று நினைத்தார். படப்பிடிப்பு தளம், பாடல் பதிவு, செய்வதற்கான அறை, கூடம், திரைப்படத்தைப் போட்டுப் பார்க்க ஒரு அரங்கம் என அனைத்து வசதிகளுடனும், 1935ல்''மாடர்ன் தியேட்டர்ஸ் '' நிறுவனம் உருவானது.

சினிமா என்பது மக்களைமகிழ்விக்கும் சாதனம்

சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தை டி.ஆர்.சுந்தரம் ஒழுங்கு கட்டுப்பாடுகளுடன் ஒரு தொழிற்சாலையைப் போல நடத்தினார். திரைப்படம் மூலமாக பிரச்சாரம் செய்வது, சமூக சீர்திருத்தம் இப்படிப்பட்ட எண்ணங்கள் ஏதுமின்றி மக்கள் விரும்பிப் பார்த்து மகிழும்படியான பொழுதுபோக்குப் படங்களைத் தரமாகக் கொடுக்கவேண்டுமென்பதுதான் இவரின் நோக்கமாக இருந்தது.

திரைப்படம் என்பது மக்களை மகிழ்விக்க வந்த ஒரு சாதனம். அதில் பொழுதுபோக்கும், மகிழ்ச்சியும்தான் இருக்க வேண்டும். தேவையில்லாத மற்ற பிரச்னைகள் அதற்குள் தலையிடாமல் இருக்க வேண்டும் என விழிப்புடன் டி.ஆர்.சுந்தரம் தனது கொள்கைகளை நிறைவேற்றி வந்தார். நகைச்சுவை நடிகர்கள் காளி என் . ரத்தினம், டி.எஸ்துரைராஜ், வி.எம்.ஏழுமலை, ஏ. கருணாநிதி, ஆகியோர் இங்குமாத சம்பளத்துக்கு வேலைபார்த்தனர். படப்பிடிப்பு குறிப்பிட்ட தேதியில் தொடங்கி குறிப்பிட்ட தேதியில் முடிய வேண்டும் என்பதில்சுந்தரம் கண்டிப்பாக இருந்தார்.


அமெரிக்க இயக்குனரான எல்லீஸ். ஆர். டங்கன் நடிகர் . நடிகைகளின் நடிப்பை அருகிலிருந்து படம் பிடிக்கிறார் (கோப்பு படம்)

கட்டுப்பாடான நிர்வாகம்

சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிர்வாகத்தில்சுமார் 250 தொழிலாளர்கள் வேலை செய்தார்கள். சுந்தரம் தமது நிறுவனத்தில் கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தினார். நடிகைகள், உள்ள பகுதிகளுக்கு நடிகர்கள் போகக்கூடாது. கதை, வசனம் முழுமையாகத் தயாரான பின்னர்தான் நடிகர், நடிகைகள், யார் யார் என்பது முடிவாகும். நன்றாக ஒத்திகை பார்த்த பிறகுதான் படப்பிடிப்பு தொடங்கும். இங்கு நடிக்க வந்த நடிகர்கள் கூட ஒரு தொழிலாளர்களைப்போல் சரியான நேரத்துக்கு வருவது, கட்டுப்பாடோடு பணியாற்றுவது, வீண்வம்பு, விவகாரம் இவற்றில் ஈடுபடாமல் தானுண்டு தன் வேலையுண்டு என இருப்பது என்று இருந்தார்கள். நடிகர், நடிகைகள் ஒப்பந்த முறையில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள். அங்கு சேர்ந்த அறிமுகமாகி, புகழ்பெற்ற நடிகராக விளங்கியவர்களில் எம்.ஆர்.ராதா , வி.எஸ். ரங்காராவ், அஞ்சலி தேவி இவர்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.


டைரக்டர்.. எல்லீஸ். ஆர். டங்கன் -அமெரிக்க திரைப்பட இயக்குனர். (கோப்பு படம்)

எல்லீஸ் டங்கன்

தன்னுடைய படங்கள், தொழில்நுட்பத்தில் சிறந்தவையாக அமைய வேண்டும் என்று சுந்தரம் விரும்பினார். ஜெர்மனியில் இருந்து ''வாக்கர்'' ''பேய்ஸ்'' என்ற இரண்டு ஒளிப்பதிவாளர்களை வரவழைத்தார். இவர்கள் தந்திரக்காட்சிகளை எடுப்பதில் வல்லவர்கள்.இவர்களிடம் பயிற்சி பெற்ற டபிள்யூ.ஆர்.சுப்பாராவ், ஜே.ஜி.விஜயம் ஆகியோர் பிற்காலத்தில் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர்களாகத் திகழ்ந்தனர். படத்தில் நடிகர், நடிகைகளின் பெயர்களையும், காண்பிக்கும்

முகப்புக்காட்சியில் படத்துக்குப் படம் புதுமையை சுந்தரம் புகுத்தினார். அதற்காக பெரும் பணம் செலவழித்தார். அமெரிக்கஇயக்குனரான எல்லீஸ் ஆர். டங்கன் இவரது படங்களுக்குஇயக்குனராக அமைந்தார். ஆங்கிலம் பேசும் ஒருஅமெரிக்கர் தமிழில் படம்இயக்கியது அக்காலத்தில்ஓர் அதிசயமாகக் கருதப்பட்டது. (இன்னும் வளரும்...)


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 20 April 2024 5:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கவிதை வரிகளில் பிறந்தநாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  2. லைஃப்ஸ்டைல்
    இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்..!
  3. வீடியோ
    ஆதரவு திரட்டும் OPS | கொங்கில் வலுவிழக்கும் Edappadi | O Panneerselvam...
  4. லைஃப்ஸ்டைல்
    இந்த மீன்களை சாப்பிட்டா கொலஸ்ட்ரால் குறையுமாம்..!
  5. ஈரோடு
    ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாகத் தேரோட்டம்
  6. ஈரோடு
    முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: ஈரோட்டில் மெழுகுவர்த்தி ஏந்தி
  7. லைஃப்ஸ்டைல்
    தமிழில் திருமண நாள் நல்வாழ்த்துக்கள்
  8. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  9. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  10. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?