திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் புதிய பஞ்சாங்கம் வாசிப்பு

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் மற்றும் ஸ்ரீ சேஷாத்திரி ஆசிரமத்தில் புதிய பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது

Update: 2024-04-14 11:12 GMT

ஸ்ரீ சேஷாத்ரி ஆசிரமத்தில் பஞ்சாங்கம் வாசித்த சிவாச்சாரியார்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. அதிகாலை அருணாசலேஸ்வரர் மற்றும் உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. பின்னர் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. மேலும் சம்பந்த விநாயகருக்கு வெள்ளி கவச அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. மேலும் கோவிலில் உள்ள சுவாமி சிலைக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு இருந்தது.

தமிழ் புத்தாண்டையொட்டி கோவில் வளாகத்தில் உள்ள சம்பந்த விநாயகர் சன்னதியில் புதிய பஞ்சாங்கத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.


பின்னர் சம்பந்த விநாயகர் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் புதிய பஞ்சாங்கம் வாசித்தனர்.   இதில் அருணாசலேஸ்வரர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம் உறுப்பினர்கள் ராஜாராம், கோமதி குணசேகரன், மற்றும் கோயில் அலுவலர்கள் பக்தர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.     தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு கோவிலில் பக்தர்கள் தங்கத்தேர் இழுத்து வழிபட்டனர்.

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதில் வெளி மாநிலம், பிற மாவட்ட பக்தர்கள் கோவிலுக்கு அதிகளவு வருகை தந்தனர்

பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரினம் செய்தனர். கோவிலில் பக்தர்களின் வசதிக்காக தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது.  

மகான் ஸ்ரீ சேஷாத்திரி ஆசிரமம்

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள மகான் ஸ்ரீ சேஷாத்திரி ஆசிரமத்தில் தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு இன்று காலை ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் சன்னதியின் முன்பு பஞ்சாங்கம் வாசித்தல் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

முன்னதாக இன்று அதிகாலை ஸ்ரீ சேஷாத் ஸ்வாமிகள் ஆசிரமம் வளாகத்தில் எழுந்தருளியுள்ள  செழுஞ்சுடர் விநாயகர், உமா தேவியார், தட்சிணாமூர்த்தி, துர்க்கை அம்மன், மற்றும் 26 சித்தர்களுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. 

அதனைத் தொடர்ந்து ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் சந்ததியின் முன்பு புதிய பஞ்சாங்கத்தை சிவாச்சாரியார் வாசித்தார்.

இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே கிரிவலம் வரத் தொடங்கினர்.

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கிரிவலம் வரும் பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம், லட்டு பிரசாதங்கள் ஆசிரமத்தின் நிர்வாகிகள் வழங்கினர். 

பிற கோவில்கள்

ஆரணி புதுகாமூர் பகுதியில் உள்ள புத்திரகாமேட்டீஸ்வரர் சிவன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கீழ்பென்னாத்தூர் அருகில் உள்ள சோமாசிபாடி பாலசுப்பிரமணியர் கோவிலில் உள்ள வள்ளி தெய்வானை சமேத முருகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.

கீழ்பென்னாத்தூரை அடுத்த ராஜந்தாங்கலில் பழமை வாய்ந்த ராஜலிங்கேஸ்வரர் கோவிலில் உள்ள ஈஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News