மழை வேண்டி திருவாசகத்தை சுமந்தபடி கிரிவலம்

மழை வேண்டி திருவண்ணாமலையில் சிவனடியார்கள் திருவாசகத்தை சுமந்தபடி கிரிவலம் சென்று வழிபட்டனர்.

Update: 2024-05-08 01:02 GMT

திருவாசகத்தை சுமந்தபடி கிரிவலம் சென்ற சிவனடியார்கள் 

உலக நன்மைக்காகவும், மழை வர வேண்டியும் அலங்கரிக்கப்பட்ட நடராஜ பெருமானுடன் திருமுடியையும், திருவாசகத்தையும் தலையில் சுமந்து திருவண்ணாமலையில் சிவனடியாா்கள் செவ்வாய்க்கிழமை கிரிவலம் சென்றனா்.

திருவண்ணாமலையில் மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுவது வழக்கம். சமீபகாலமாக வாரத்தின் அனைத்து நாட்களிலும் பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுகின்றனர். அதோடு, நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் விரதம் இருந்து குழுவாக கிரிவலம் செல்வதும் சமீபமாக அதிகரித்து வருகிறது.

திருவாசகத்தை சுமந்தபடி...

தமிழகத்தில் கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்படுகிறது. திருவண்ணாமலையில் செவ்வாய்க்கிழமை 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது.

இந்த நிலையில் தேனி மாவட்டம் கோம்பை பகுதியைச் சேர்ந்த சிவனடியார்கள் திருக் கூட்டம் அமைப்பைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட பக்தர்கள் உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் திருவண்ணாமலையில் நேற்று மேளதாளம் முழங்க திருமுடி எனப்படும் திருவாசகம் தலையில் சுமந்தபடி கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கிரிவலம் சென்று வழிபட்டனர். திருவாசகத்துடன், நெய் வில்வம் ஆகியவற்றையும் தலையில் திருமுடியாக சுமந்துச் சென்று கிரிவலத்தின் நிறைவாக அண்ணாமலையார் கோயிலில் காணிக்கையாக செலுத்தினர். தொடர்ந்து, 5 ஆண்டுகளாக திருவண்ணாமலையில் இதுபோன்ற கிரிவலத்தை மேற்கொண்டு வருவதாக சிவனடியார் திருக் கூட்டம் அமைப்பை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

திருவண்ணாமலை ராஜகோபுரம் அருகே திருமுடிகளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. மேலும், திருத்தேரில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த நடராஜ பெருமானுடன் சுமாா் 150-க்கும் மேற்பட்ட சிவனடியாா்கள் கொளுத்தும் வெயிலையும் பொருள்படுத்தாமல் திருமுடியையும், திருவாசகத்தையும் தலையில் சுமந்து நமசிவாய மந்திரத்தை ஓதியபடியும், சங்கொலி முழங்கியும், சிவதாண்டவம் ஆடி கிரிவலம் மேற்கொண்டனா்.

Similar News