மாதந்தோறும் ஊதியம் வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் கலெக்டரிடம் மனு

மாதந்தோறும் ஊதியம் வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

Update: 2024-05-07 02:29 GMT

கலெக்டரிடம் மனு அளித்த தூய்மை பணியாளர்கள்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு கிராம ஊராட்சி தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள், சுகாதார ஊக்குனர்கள், மேல்நிலை நீர் தேக்க தொட்டி இயக்குபவர்கள், மாநில நலச்சங்கம் திருவண்ணாமலை மாவட்ட கிளைகள் மாவட்ட செயலாளர் முருகன் தலைமையில், மாவட்ட தலைவர் கிரிஜா, மாவட்ட பொருளாளர் அரசு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பச்சையப்பன் ,மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் ,மாநில ஒருங்கிணைப்பாளர் சென்னம்மாள் ,ஆகியோர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் , மற்றும் கூடுதல் ஆட்சியர் ரிஷப் ஆகியோரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்,

அந்த மனுவில், திருவண்ணாமலை மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து கிராம ஊராட்சி ஒன்றியங்களில் 1798 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, 219 நடுநிலைப்பள்ளி, 160 உயர்நிலைப் பள்ளிகளில் பணிபுரிகின்ற தூய்மை பணியாளர் மற்றும் கழிவறை சுத்தம் செய்பவர்களுக்கு ஆறு மாதத்தில் ஒரு முறை தான் ஊதியம் வழங்கப்படுகிறது . இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

எனவே தூய்மை பணியாளர் மற்றும் கழிவறை சுத்தம் செய்பவர்களுக்கு மாதந்தோறும் ஊதியம் வழங்க வேண்டும் . மேலும் பணியாளர்களுக்கான பணி பதிவேடு துவக்குவதற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர்களுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

மனுவினை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் மற்றும் கூடுதல் ஆட்சியர் மனு மீது விரைந்து நடவடிக்கை எடுத்து மாதந்தோறும் ஊதியம் வழங்கவும் பணி பதிவேடு துவக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதாக துப்புரவு பணியாளர்கள் தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள், தூய்மை பணியாளர் சங்க கிளை நிர்வாகிகள் ,தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News