அமைச்சர் எ.வ.வேலுக்குச் சொந்தமான இடங்களில் 5வது நாளாக தொடரும் ஐடி ரெய்டு

அமைச்சர் எ.வ.வேலுக்குச் சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் 5வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2023-11-07 02:55 GMT

கோப்புப்படம் 

திருவண்ணாமலை: பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலுக்குச் சொந்தமான வீடு, அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த நவம்பர் 3 முதல் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

மத்திய பாதுகாப்பு படையினரின் உதவியுடன் திருவண்ணாமலை அருணை மருத்துவக் கல்லூரி, அருணை பொறியியல் கல்லூரி, கம்பன் கலைக்கல்லூரியில் சோதனை நடைபெற்று வருகிறது.

இந்த சோதனை சென்னை, திருவண்ணாமலை, கோயம்புத்தூர், கரூர் ஆகிய ஊர்களில் சுமார் 100 இடங்களில் நடைபெறுகிறது. நிறுவன தலைமை அலுவலகம் ஆகிய இடங்களிலும் சோதனை நடத்தப்படுகிறது. இந்நிலையில் அமைச்சரின் மகன் கம்பன் வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது.

இதில் அதிகாரிகள் பல்வேறு ஆவணங்கள் மற்றும் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்ட ஆவணங்களை கைப்பற்றி எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி தண்டராம்பட்டு அடுத்த வரகூரில் கிரானைட் நிறுவனம், தானிப்பாடியில் உள்ள இரும்பு குடோன், பெட்ரோல் பங்க் உட்பட 20 க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அமைச்சர் எ.வ.வேலுவின் உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் மற்றும் வட்டாரம், ஒப்பந்ததாரர்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் சுழற்சி முறையில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதேபோல் கோவையில் ராமநாதபுரத்தில் உள்ள தி.மு.க. பிரமுகரின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் இன்றும் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மற்றும் கரூர், பெரியார் நகரில் உள்ள முன்னாள் தி.மு.க., மாவட்ட செயலர் வாசுகி முருகேசனின் தங்கை பத்மா வீடு, சுரேஷ் என்பவரது நிதி நிறுவனம் மற்றும் வீடு, புஞ்சை தோட்டக்குறிச்சியில் சுரேஷ் மாமனார் சக்திவேல் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடந்தது.

இந்நிலையில் வேலுவிற்கு சொந்தமான அருணை பொறியியல் கல்லூரியில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூபாய் 10 கோடிக்கு மேல் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ஒரு சில இடங்களில் சோதனை நிறைவு பெற்ற நிலையில் அங்கிருந்து முக்கிய ஆவணங்கள் உள்ளிட்டவற்றை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது

Tags:    

Similar News