புதுமைப்பெண் திட்டத்தில் பயன்பெற பள்ளி மாணவிகளுக்கு கலெக்டர் அழைப்பு..!

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தில் பயன்பெற பள்ளி மாணவிகளுக்கு கலெக்டர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்

Update: 2024-05-27 01:16 GMT

பைல் படம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வரை தமிழ் வழிக்கல்வி பயின்று உயா்கல்வியில் சேரும் மாணவிகள் புதுமைப்பெண் திட்டத்தில் பயன்பெற வங்கிகள், அஞ்சலகங்களில் புதிய கணக்குத் தொடங்கி பயன்பெறலாம் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகள், தொடர்ந்து உயர்கல்வியை பெறுவதற்கு பொருளாதாரம் தடையாக இருக்கக்கூடாது என்பதற்காக தமிழ்நாடு அரசால் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த சிறப்பான திட்டம் புதுமைப் பெண் திட்டமாகும்.

தமிழகத்தில் 2022-ஆம் ஆண்டு முதல் அரசுப் பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வரை பயின்று அடுத்தகட்டமாக பட்டம், பட்டயம், தொழிற்கல்வி ஆகியவற்றில் சேரும் மாணவிகளுக்கு மாதம்தோறும் 1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டம் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வியில் பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது.

ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள், நகராட்சி பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள், பழங்குடியினர் நலப் பள்ளிகள், கள்ளர் சீர்மரபினப் பள்ளிகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலப் பள்ளிகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை பள்ளிகள், வனத்துறை பள்ளிகள், சமூக பாதுகாப்புத் துறை பள்ளிகள் போன்றவற்றில் படிக்கும் மாணவர்களும் இத்திட்டத்தில் பயன்பெறலாம்.

இந்த நிலையில், 2023-2024 ஆம் கல்வியாண்டில் திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் 13 ஆயிரத்து 827 மாணவிகள் பிளஸ் 2 பொதுத் தோ்வை எழுதினா். இவா்களில், 12 ஆயிரத்து 984 மாணவிகள் தோ்ச்சி பெற்றனா். இவா்களில் பட்டம், பட்டயம், தொழில்கல்வி ஆகியவற்றில் சேரும் அனைத்து மாணவிகளும் அரசுடைமை வங்கிகள் அல்லது அஞ்சல் அலுவலகங்களில் புதிய கணக்குத் தொடங்கி இந்தத் திட்டத்தில் பயன்பெறலாம்.

மேலும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின்படி இத்திட்டத்தில் பயன்பெறும் கல்லூரி முதல்வர்கள் திட்ட ஒருங்கிணைப்பு அலுவலர்கள் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட சமூக நல விரிவாக்க அலுவலர்கள் மகளிர் நல அலுவலர்கள் அனைவரும் புதுமைப்பெண் திட்டத்தில் பயன்பெறும் மாணவியர்களின் விவரங்களை விரைவில் இணைய முகப்பில் பதிவேற்றம் செய்யுமாறு மேலும் மாணவிகளின் திட்டத்தில் தொடர்ந்து பயனடைவதை மாதம் உறுதி செய்யுமாறும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News