திருவண்ணாமலையில் பக்ரீத் பண்டிகையையொட்டி முஸ்லிம் மக்கள் சிறப்பு தொழுகை

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற பக்ரீத் பண்டிகையொட்டி சிறப்பு தொழுகையில் ஏராளமான முஸ்லிம் மக்கள் கலந்து கொண்டனர்.

Update: 2024-06-17 11:30 GMT

ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகை செய்த இஸ்லாமிய மக்கள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற பக்ரீத் பண்டிகையொட்டி சிறப்பு தொழுகையில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

ரமலான், பக்ரீத் பண்டிகைகள் இஸ்லாமியர்களின் வாழ்வில் மிக முக்கியமானவை. ஐந்து கடமைகளில் ஒன்றான நோன்பிருத்தலை 30 நாட்கள் கடைப்பிடித்து பின்னர் ஈகைத் திருநாள் என்றழைக்கப்படும் ரமலான் பண்டிகை கொண்டாடப்படும். இதற்கு அடுத்தபடியாக இஸ்லாமியர்கள் கொண்டாடும் முக்கியமான பண்டிகை தியாகத் திருநாள் என்றழைக்கப்படும் பக்ரீத் பண்டிகை.

முஸ்லிம்களின் முக்கிய பண்டிகையான தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு முஸ்லிம்கள் காலையில் எழுந்து குளித்து விட்டு புத்தாடை அணிந்து மசூதிகளுக்கு சென்று தொழுகை நடத்தினர். திருவண்ணாமலையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு இடங்களில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றது.

திருவண்ணாமலை மணலூர்பேட்டை சாலையில் உள்ள ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். தொழுகை முடிந்த பின்னர் ஒருவருக்கொருவர் கட்டிப்பிடித்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். குழந்தைகளும் பலர் தொழுகை செய்து, ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறி கொண்டனர். இதேபோன்று அனைத்து மசூதிகளிலும், ஈக்தா மைதானத்திலும் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றது.

பின்னர் அவர்கள் உற்றார், உறவினர்கள், நண்பர்கள், ஏழை எளிய மக்களுக்கு இறைச்சி (குர்பானி) வழங்கினர். அனைத்து தரப்பு மக்களும் தங்களது முஸ்லிம் நண்பர்களுக்கு பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.

திருவண்ணாமலை அவலூர்பேட்டை சாலை ரெயில்வே கேட் அருகே உள்ள ஈத்கா மைதானம், பாலாஜி நகர் உள்பட பல்வேறு இடங்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

ஆரணி

ஆரணி நகரில் பெரிய கடை வீதியில் உள்ள புது மசூதி, சின்ன மசூதி மற்றும் சூரியகுளம் அருகாமையில் உள்ள மசூதி, காஜிவாடை பகுதியில் உள்ள மசூதி உள்ளிட்ட மசூதிகளில் பக்ரீத் பண்டிகையொட்டி சிறப்பு தொழுகை நடந்தது.

வந்தவாசி

வந்தவாசியில் ஆரணி நெடுஞ்சாலையில் உள்ள ஈத்கா மைதானத்தில் ஏராளமானவர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். தொழுகை முடிந்த பிறகு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி பக்ரீத் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டு தங்களுடைய அன்பை வெளிப்படுத்தினர். இந்த சிறப்பு தொழுகையில் வந்தவாசி சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். மேலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் வந்தவாசி அக்பர் தெருவில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

சேத்துப்பட்டு பழம்பேட்டையில் உள்ள பெரியபள்ளி வாசலில் இருந்து முஸ்லிம்கள் ஊர்வலமாக சென்று நிர்மலா நகர் பகுதியில் உள்ள ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகை நடத்தினர். இதேபோல போளூர் ஈத்கா மைதானத்திலும் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் தொழுகை நடத்தினர்.

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் 87 இடங்களில் தொழுகை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்துகொண்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

Similar News