சித்ரா பௌர்ணமியையொட்டி திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்

அண்ணாமலையார் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் நீர் மோர் வழங்கினார்.

Update: 2024-04-23 02:04 GMT

சுட்டெரிக்கும் வெயிலில் கிரிவலம் சென்று கொண்டிருக்கும் பக்தர்களின் கூட்டம்

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் திருக்கோயிலில் சித்ரா பௌர்ணமி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அன்று இரவு பராசக்தி அம்மனின் பூப்பல்லக்கு விழா விமரிசையாக நடைபெறும். ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி நாட்களில் 7 லட்சத்திலிருந்து 10 லட்சம் வரை பக்தர்கள் கிரிவலம் மேற்கொள்வார்கள்.

குறிப்பாக சித்ரா பௌர்ணமி, கார்த்திகை தீப பௌர்ணமி ஆகிய தினங்களில் திருவண்ணாமலையில் 15 லட்சத்திலிருந்து 40 லட்சத்துக்கு மேற்பட்ட உள்ளூர், வெளிமாவட்டம் மற்றும் ஆந்திரா, தெலங்கானா, கேரளா, கர்நாடகா ஆகிய வெளிமாநில பக்தர்கள் கிரிவலம் மேற்கொள்வார்கள்.

அந்த வகையில் இன்று அதிகாலை 4:17 மணி முதல் 24 ஆம் தேதி அதிகாலை 5:47 மணி வரை சித்ரா பௌர்ணமி கிரிவலம் நடைபெற உள்ள நிலையில்,

நேற்று நள்ளிரவு முதலே பக்தர்கள் கிரிவலம் வர தொடங்கினர்.

தற்போது திருவண்ணாமலையில் 100 டிகிரிக்கு மேல் கொளுத்தும் வெயிலிலும் பக்தர்கள் கிரிவலம் வந்து கொண்டிருக்கின்றனர்.

குறிப்பாக பவுர்ணமி நிலவு இன்று மாலைக்கு மேல் வர இருப்பதாலும் வெயிலின் தாக்கம் சற்று குறைவதாலும் மாலை 4 மணிக்கு மேல் பல லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


கிரிவலப்பாதை முழுவதும் காவல் துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. திருக்கோவில், கிரிவலப்பாதை, நகரம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சுமார் 550 க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி தீவிரமாக பக்தர்களை கண்காணித்து வருகின்றனர் .

கோவில் நிர்வாகத்திற்கு பக்தர்கள் பாராட்டு

தற்போது பூத நாராயணன் கோயில் முதல் ராஜகோபுரம் செல்லும் தேரடி வீதி முழுவதும் நிழல் தரும் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் வெயிலின் தாக்கம் அதிகம் இல்லாமல் சுவாமி தரிசனத்திற்கு கோவிலுக்குள் செல்கின்றனர். கோயிலை சுற்றி பல்வேறு இடங்களில் சுமார் 1 அரை கிலோ மீட்டர் நீளத்திற்கு ஆங்காங்கே நிழற்பந்தல்கள் அமைக்கப்பட்டு ஒருவர் பின் ஒருவராக கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்காமல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வெளியில் வந்து கொண்டிருக்கின்றனர்.

இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்து நிழல் பந்தல் அமைத்து தந்த கோவில் நிர்வாகத்தினருக்கும் மாவட்ட ஆட்சியருக்கும் பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்தனர்

பக்தர்களுக்கு நீர்மோர்

மேலும் திட்டிவாசல் அருகே மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்  கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு நீர் மோரும், தண்ணீரும் வழங்கினார்.

அதேபோல் கைக்குழந்தையுடன் வரும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள், வயதானவர்களுக்கு தனியாக கோவிலுக்குள் செல்லும் பாதை ஏற்படுத்தப்பட்டு அவர்கள் விரைவாக சாமி தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News