அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று முதல் 5 நாட்களுக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-01-14 05:41 GMT

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில்.

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர்.

மேலும் கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி கிரிவலப்பாதையில் உள்ள அஷ்ட லிங்க கோவில்களிலும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபாடு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கொரோனா,  அச்சுறுத்தல் காரணமாக கடந்த 7-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை என 3 நாட்கள் அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் பக்தர்கள் செல்ல தமிழக அரசால் தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 10-ந் தேதி முதல் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தின் அடிப்படையில் மீண்டும் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 18-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) வரை என 5 நாட்கள் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் மக்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதித்து அரசு உத்தரவிட்டது.

அதன்படி இன்று முதல் தொடர்ந்து 5 நாட்கள் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து அறிவிப்பு பலகை கோவிலின் ராஜகோபுரம் உள்ளிட்ட 4 கோபுர வாயில் முன்பும் வைக்கப்பட்டு உள்ளது. அதேபோல் கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்க கோவில்களிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்படுகிறது. கிரிவலப்பாதையில் உள்ள ஸ்ரீ சேஷாத்ரி ஆசிரமம், ரமண மகரிஷி ஆசிரமம், யோகி ராம்சுரத்குமார் ஆசிரமம் உள்ளிட்டவைகளும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும் இன்றும் நாளையும் கிரிவலம் வருவதற்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை என்ற காரணத்தினால் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வந்த வண்ணம் உள்ளனர்.

இன்று பொங்கல் பண்டிகையை தொடர்ந்து வரும் விழா நாட்களில் கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாததால் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர்.  

Tags:    

Similar News