அண்ணாமலையார் கோவிலில் பக்தர்கள் முக கவசம் அணிந்து வர வலியுறுத்தல்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வரும் பக்தர்கள் முக கவசம் அணிய வேண்டும் என இணை ஆணையர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Update: 2022-06-30 06:49 GMT

பைல் படம்.

தமிழகத்தில் கொரோனா  பரவல் கடந்த சில வாரங்களாக படிப்படியாக உயர்ந்து வருகிறது. சராசரியாக நாள் ஒன்றுக்கு சுமார் ஆயிரம் பேர் தொற்றினால் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே சுகாதாரத் துறை சார்பில் பல்வேறு முன்னே எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதோடு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தனி கவனம் செலுத்த வேண்டும், பொது இடங்களில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிப்பதை நடைமுறைப்படுத்த வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் முற்றிலுமாக கட்டுக்குள் இருந்த நிலையில் தற்போது மீண்டும் படிப்படியாக அதிகரிக்க தொடங்கி இருப்பது கவலையை ஏற்படுத்தி இருக்கிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஒன்றாம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் ஒருவரும் இல்லை என்ற நிலை காணப்பட்டது. தொற்றினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்றைய நிலவரப்படி 55 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.  எனவே கோவிலுக்கு வரும் பக்தர்கள் முக கவசம் அணிந்து வரவேண்டும். தொற்றுப் பரவலை தடுக்க கோவில் நிர்வாகம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு பக்தர்கள் ஒத்துழைக்க வேண்டும் என கோவில் இணை ஆணையர் அசோக் குமார் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் கோயிலின் பிரதான நுழைவாயில்களில் ஏற்கனவே இருந்த நடைமுறைப்படி கிருமி நாசினியால் கைகளை தூய்மை செய்தல், தனிநபர் இடைவெளி போன்றவை நடைமுறைப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது என கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News