மீன்பிடி தடைகாலம் 14ல் நிறைவு: தயார்நிலையில் தூத்துக்குடி மீனவர்கள்!

மீன்பிடி தடைக்காலம் வருகிற 14ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் கடலுக்குள் செல்ல தூத்துக்குடி மீனவர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

Update: 2021-06-08 11:42 GMT
தூத்துக்குடி துறைமுகத்தில் மீன்பிடி படகுகளை தயார்படுத்தும் பணியில் மீனவர்கள்.

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு 240-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கு, மீன் வரத்து குறைவு, டீசல் விலை உயர்வு மற்றும் மீன்பிடி தடைகாலம் உள்ளிட்ட காரணங்களால் கடந்த 70 நாட்களுக்கும் மேலாக தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து எந்த ஒரு விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை.

துறைமுகத்திலேயே படகுகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் வருகிற ஜூன் 14ஆம் தேதி மீன்பிடி தடை காலம் முடிகிறது. இதை தொடர்ந்து தூத்துக்குடி துறைமுகத்தில் விசைப்படகுகளை சீர் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இது குறித்து விசைப்படகு மீனவர்கள் உரிமையாளர் சங்க பொறுப்பாளர் ஜான்போஸ்கோ செய்தியாளரிடம் தெரிவிக்கையில், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மீன்பிடி தடை காலத்தில் விசைப்படகுகள் எதுவும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

இந்நிலையில் வருகிற 15-ஆம் தேதி முதல் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடலுக்கு செல்லும் மீனவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து அரசு அதிகாரிகள்-மீனவர்கள் இடையேயான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் அரசு அதிகாரிகள் சொன்ன வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மீனவர்கள் மீன்பிடித் தொழில் செய்வதற்கு சம்மதம் தெரிவித்துள்ளோம். கடந்த ஆண்டு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி சுழற்சி அடிப்படையில் விசைப்படகுகள் கடலுக்கு சென்று வந்தன. அந்த முறையே தற்பொழுதும் பின்பற்றப்படும்.

மீனவர்களுக்கு 1500 லிட்டர் டீசல் மட்டுமே மானியமாக வழங்கப்படுகிறது. இதை 5,000 லிட்டராக உயர்த்தி வழங்கினால் மீனவர்களின் நலன் காக்க முடியும் என்றார்.

Tags:    

Similar News