தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் முக்கிய அறிவிப்பு

பசுபதி பாண்டியன் நினைவு நாள் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் முக்கிய அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

Update: 2024-01-07 16:14 GMT

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலாஜி சரவணன்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பசுபதிபாண்டியன் 12ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அஞ்சலி செலுத்த வருபவர்கள் மற்றும் நிகழ்ச்சி அமைப்பாளர்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

வருகிற 10.01.2024 அன்று நடைபெற உள்ள பசுபதி பாண்டியன் 12வது நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேல அலங்காரதட்டு பகுதியில் உள்ள பசுபதி பாண்டியன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வருபவர்கள் மற்றும் நிகழ்ச்சி அமைப்பாளர்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள். 

தற்போது கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டம் மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதால், இந்நிகழ்ச்சி பொதுமக்களுக்கு எவ்வித இடையூறு இல்லாமல் அமைதியான முறையில் நடக்க வேண்டும். ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள நிகழ்ச்சிகள் தவிர வேறு புதிய நிகழ்ச்சிகளுக்கு அனுமதியில்லை.

பசுபதி பாண்டியன் நினைவு நாள் நிகழ்ச்சிகள் அனைத்தையும் 10.01.2024ம் தேதி காலை 06.00 மணிக்கு ஆரம்பித்து மாலை 05.00 மணிக்குள் முடித்துக் கொள்ள வேண்டும்.

நினைவு நாள் அஞ்சலி செலுத்த வருவதற்கு இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாடகை  வாகனங்களில் வருவதற்கு அனுமதி கிடையாது.

நினைவு தினத்திற்கு அஞ்சலி செலுத்த வருபவர்கள் பேருந்து மற்றும் அவர்களது தனியார் நான்கு சக்கர வாகனங்களில் வருவதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

நினைவு நாளின் போது பால்குடம் எடுத்து வருவதற்கோ, ஊர்வலத்திற்கோ அனுமதி கிடையாது.

மேற்படி நினைவு நாளின் போது அஞ்சலி செலுத்த வரும் நபர்கள் வாள் போன்ற ஆயுதங்கள் கொண்டு வந்தால் இந்திய தண்டணை சட்டப்படி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

மேற்படி நினைவு நாளின் போது அஞ்சலி செலுத்த வரும் நபர்கள் அனுமதி வழங்கப்பட்ட சாலை/தெரு/பாதைகள் வழியாகத்தான் செல்ல வேண்டும்.

மேற்படி நினைவு நாளின் போது அஞ்சலி செலுத்த செல்லும் போது சாலை/தெரு/பாதைகளில் உள்ள பொதுமக்களுக்கோ, போக்குவரத்திற்கோ எந்தவித இடையூறும் செய்யவோ, மறிக்கவோ கூடாது.

மேற்படி நினைவு நாளின் போது அஞ்சலி செலுத்த செல்லும்போது அதிகப்படியான ஒலி எழுப்பி பொது மக்களுக்கு இடையூறோ, மற்ற சாதி, மத உணர்வுகளை தூண்டும் வாசகங்களை சொல்லவோ, சாதி அடையாளங்களுடன் உடை (டீ-சர்ட்) அணிந்து வரவோ, பாடல்களை பாடவோ, ஒலி எழுப்பவோ, கோஷம் போடவோ கூடாது.

காவல்துறை சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து ஒழங்குபடுத்துதல் சம்பந்தமாக எடுக்கும் நடவடிக்கைகளுக்கு கட்டுப்பட்டு செல்ல வேண்டும்.

காவல் துறையினர் அவ்வப்போது நடைமுறையில் இருக்கும் சட்ட திட்டம், சூழ்நிலைக்குட்பட்டு விதிக்கும் நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டு அதனை கடைபிடித்து ஒத்துழைப்பு தர வேண்டும்.

மேற்படி நினைவு நாளின் போது அஞ்சலி செலுத்த செல்லும்போது எந்த பகுதியிலும் பட்டாசு, வாணவேடிக்கை அல்லது வேறு எந்த ஒலி எழுப்புவதற்கோ, மனித உயிருக்கும், பொது உடமைக்கும் ஆபத்து விளைவிக்கும் அபாயகரமான பொருட்களையோ பயன்படுத்துதல் கூடாது எனவும் மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட காவல்துறை சார்பாக தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News