சென்னையில் கஞ்சா கேக் விற்பனை; ஐந்து பேர் கைது
சென்னையில் கஞ்சாவில் கேக் செய்து கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்த, ஓட்டல் உரிமையாளர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
கஞ்சா சாக்லெட்டை தொடர்ந்து, தற்போது கஞ்சாவில் கேக் செய்து விற்கப்படுகிறது. சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் கஞ்சா கேக் விற்பனை அமோகமாக நடப்பதாக, நுங்கம்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த கும்பலை பிடிக்க, போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டது.
போலீசார் நடத்திய சோதனையில், நுங்கம்பாக்கம் பகுதியில் ஓட்டல் நடத்தி வரும் விஜயரோஷன் டேக்கா மற்றும் பச்சை குத்தும் நிறுவனம் நடத்தி வந்த தாமஸ் ஆகிய இருவரும் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து கஞ்சா கேக் பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சாவை பொடி செய்து, கேக்கில் கலந்தும், போதை மாத்திரையை தூள் செய்தும் விற்றுள்ளனர். மேலும் போதை ஸ்டாம்ப் எனப்படும், நாக்கின் உள்பகுதியில் தடவினால் போதை தரும் ஸ்டிக்கரை விற்றதும் தெரிய வந்தது. விஜயரோஷன் டேக்கா, தாமஸ் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், இதில் தொடர்புடைய கார்த்திக், ஆகாஷ், பவன் கல்யாண் ஆகிய மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில், பெங்களூருவில் இருந்து போதை மாத்திரை மற்றும் போதை ஸ்டாம்ப் போன்றவை வருவதாக தெரிவித்தனர். 150 கிராம் எடையுள்ள கஞ்சா கேக் ரூ.500 வரை விற்கப்படுவதாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.