ஈரோடு மாவட்ட மலையாளி இன மக்களுக்கு பழங்குடியின அங்கீகாரம்: மத்திய அமைச்சரிடம் எம்பி மனு
ஈரோடு மாவட்ட மலையாளி இன மக்களுக்கு பழங்குடியின அங்கீகாரம் வழங்க வேண்டும் என மத்திய அமைச்சர் ஸ்ரீ ஜுவல் ஓரமிடம் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் கோரிக்கை மனு அளித்தார்.
ஈரோடு மாவட்ட மலையாளி இன மக்களுக்கு பழங்குடியின அங்கீகாரம் வழங்க வேண்டும் என மத்திய அமைச்சர் ஸ்ரீ ஜுவல் ஓரமிடம் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் கோரிக்கை மனு அளித்தார்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் சத்தியமங்கலம் வட்டத்தில் உள்ள பர்கூர், கடம்பூர் மலைப்பகுதிகளில் மலையாளி இன மக்கள் சுமார் 30 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இவர்களின் உறவினர்கள் சேலம், நாமக்கல், தருமபுரி, திருச்சி மாவட்டங்களில் உள்ளனர் . இவர்கள் பழங்குடியினர் பட்டியலில் உள்ளனர். ஆனால் ஈரோடு மாவட்டத்தில் மட்டும் இதர பிரிவில் உள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள இம்மக்களின் பண்பாடு, கலாச்சார பழக்க வழக்கங்கள் போன்றவை பிற மாவட்டங்களில் உள்ள மலையாளி மக்களையே ஒத்திருக்கின்றன. பெண் கொடுத்தல்-எடுத்தலும் இவர்களுக்குள் நிலவி வருகிறது. சென்னைப் பல்ககை்கழகத்தின் மாணுடவியல் துறை, உதகையில் உள்ள பழங்குடியினர் ஆய்வு மையம் ஆகியவை இம்மக்களின் பண்பாடு-பழக்க வழக்கங்களை ஆய்வு செய்து இவர்களும் பழங்குடியினர் தான் என பல முறை அறிக்கைகளை அளித்துள்ளன.
ஈரோடு மாவட்ட மலையாளி இன மக்கள் இதர பிரிவில் உள்ளதால் இம்மக்கள் கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் பின்தங்கியுள்ளனர். பழங்குடியினருக்கான சலுகைகள் எதனையும் பெற முடிவதில்லை. ஈரோடு மாவட்ட மலையாளி இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டுமானால், மாநில அரசின் முன் மொழிவைப் பெற்று, மத்திய அரசு அரசியல் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும்.
இதற்காக தமிழ்நாடு அரசு பல முறை முன் மொழிவுகளை அனுப்பியும் மத்திய அரசு அதனை ஏற்று சட்ட திருத்தம் செய்யாமல் காலந்தாழ்த்தி வந்தது. கடந்த ஆண்டுகளில் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் பலமுறை நாடாளுமன்றத்தில் இப்பிரச்சனையைப் பற்றி பேசி அரசினை வலியுறுத்தி வந்தார். கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசும் ஈரோடு மாவட்ட மலையாளி இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என மீண்டும் முன்மொழிவினை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது.
மத்திய அரசு அதனை ஏற்று சட்ட முன்வரைவை நாடாளுமன்றத்தில் வைத்து சட்டத்திருத்தம் செய்யாமல், திரும்பவும் பல நியாயமற்ற சந்தேகங்களை எழுப்பி தமிழ்நாடு அரசிடம் விளக்கம் கேட்டு வந்தது. இந்நிலையில், டெல்லியில் மத்திய பழங்குடியினர் விவகாரத் துறை அமைச்சர் ஸ்ரீ ஜுவல் ஓரம்-வை திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் கே.சுப்பராயன் நேரில் சந்தித்து, விரைவாக சட்டத் திருத்தத்தினை மேற்கொண்டு ஈரோடு மாவட்ட மலையாளி இன மக்களுக்கு பழங்குடியின அங்கீகாரத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தார். மத்திய அமைச்சரும் விரைந்து அதற்கான ஏற்பாடுகளை செய்வதாக தெரிவித்துள்ளார்.