Salem City Traffic Jam சேலம் மாநகரில் கடும் போக்குவரத்து நெரிசல்:அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?....

Salem City Traffic Jam சேலம் மாநகரில் தினமும் வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை சரி செய்ய தேவையான போக்குவரத்து போலீசாரை பணியமர்த்த வேண்டும். நடவடிக்கை எடுப்பார்களா?....

Update: 2024-01-08 18:23 GMT

சேலம் மாநகரில்  ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசல்  (கோப்பு படம்)

Salem City Traffic Jam

சேலம் மாநகரில் காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருவது தொடர்கதையாகி வருகிறது.

சேலம் மாநகரைப்பொறுத்தவரை பல உயர்மட்ட மேம்பாலங்கள் அதிகம் உள்ளதால்இந்த ஊரை சேலத்திலிருந்து பாலம் என்று கூட அழைக்கலாம்.அந்த அளவிற்கு போக்குவரத்து பாதிப்பை சரி செய்ய உயர்மட்ட மேம்பாலங்கள் கடந்த அதிமுக ஆட்சியில் திறக்கப்பட்டது. இப்படி இருந்தும் சேலம் அம்மாப்பேட்டை, டிஎம்எஸ் ஷெட், பொன்னம்மாபேட்டை உள்ளிட்டபகுதிகளில் தொடரும் போக்குவரத்து நெரிசலானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதே தவிர குறைந்த பாடில்லை.

காலை நேரத்திலும் மாலை நேரத்திலும் ஆபீஸ் செல்வோர், பள்ளி, கல்லுாரி செல்வோர் , மற்றும் பள்ளி, கல்லுாரி பஸ்கள், ஆட்டோக்கள் ,டூவீலர்கள் மற்றும் வழக்கமாக இவ்வழியே செல்லும் டவுன்பஸ்கள், மப்ஸல் பஸ்கள் என தொடர்ந்து வாகனங்களின் எண்ணிக்கையானது அதிகரித்துவிடுவதால் ஒரு வாகனம் குறுக்கே வந்தாலும் இடையூறாகி திடீரென போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு விடுகிறது.

பொன்னம்மாப்பேட்டை ரயில்வே கேட் பகுதியில் போக்குவரத்து போலீசார் பணியில்இருந்தாலும் அவர்கள் சரியான படி வாகனங்களை அனுமதித்தால் இதுபோல் நிகழாது என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். ஒரு பகுதியில் இருந்து வரும் வாகனங்களை அதிக நேரம் நிறுத்திவைத்துவிட்டு ஒரு பகுதியினை அதிக நேரம் விடுவதால் இச்சம்பவமானது தினந்தோறும் தொடர்கதையாகி வருகிறது.

Salem City Traffic Jam


அதேபோல் ரயில்வே கேட் போடப்பட்டாலும் இப்பிரச்னை தொடர்கிறது. இதற்கான நிரந்தர தீர்வு தான் என்ன? அணைமேடு ரயில்வே கேட் பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணியானது ஆமை வேகத்தில் நடந்து வருவதால்தான் இப்பிரச்னையே. பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் இன்று வரை சேலம் முள்ளுவாடிகேட் , மற்றும் அணைமேடு ரயில்வே கேட் பகுதியில் உயர்மட்ட மேம்பாலப்பணிகள் விரைவுபடுத்தவில்லை. பொதுமக்களின் சிரமங்களை எந்த அதிகாரிகளும் கருத்தில் கொள்வதில்லை. இதனால் அவசர வேலைக்கு செல்வோர் திடீரென ஆம்புலன்ஸ் ஆஸ்பத்திரிக்கு செல்ல வந்தால் கூட வழியில்லாமல் திண்டாட்டமாகவே உள்ளது.

அம்மாப்பேட்டை-சின்னக்கடைவீதி

சேலம் பட்டைக்கோயில் பகுதியில் இருந்து அம்மாப்பேட்டை செல்லும் வழியின் இருபுறமும் புதிய கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டது முதல் ரோட்டின் ஏற்கனவே இருந்த அகலம் குறைந்துவிட்டது. இதனால் ஒருவழிப்பாதையாகவே நிரந்தரமாகவே மாறிவிட்டது என்று சொல்லலாம்.

எதிரெதிரே இரு கார்கள் வந்தால் கூட ஒதுங்குவதிற்கு வழி இல்லாததால் தினந்தோறும் இப்பகுதியானது கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித்தவித்து வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வினை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். பல நேரங்களில் பலர் ரோட்டிலேயே சாய்தள அமைப்பை செய்துள்ளதால் நடந்து செல்வோர் போக்குவரத்து நெருக்கடியின் போது வழுக்கி கீழே விழுகின்றனர்.

சின்னக்கடைவீதி

அம்மாப்பேட்டை பகுதியில் இருந்து செல்லும் டவுன் பஸ்கள் அனைத்துமே சின்னக்கடைவீதி வழியாகவே பழைய பஸ்ஸ்டாண்டிற்கு செல்கின்றன. சின்னக்கடைவிதியின் இருபுறத்திலும் பிளாட்பார கடைகள் நிரந்தரமாக விரிக்கப்படுவதால் ரோட்டின் அகலமானது குறுகிவிடுகிறது. இதனால் போக்குவரத்து நெருக்கடி என்பது நிரந்தர தலைவலியாகவே இப்பகுதியில் தினந்தோறும் இருந்து வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு மாநகராட்சி சார்பில் எடுத்த ஒரு நாள் நடவடிக்கையில் கயிறு கட்டப்பட்டது. அந்த கயிற்றிற்கு அந்தப்புறம்தான் கடை விரிக் கவேண்டும் எனவும் எச்சரிக்கப்பட்டது. ஆனால் அதனை யாரும் பாலோ செய்யாததால் ரோட்டை ஆக்கிரமித்துவிடுவதால் ரோட்டின் அகலம் குறைந்து போக்குவரத்துநெருக்கடி தொடர்கதையாகிவருகிறது.

தினந்தோறும் காலை , மாலை வேளைகளில் நிலவும் போக்குவரத்து நெரிசலைச் சரிப்படுத்தவேண்டும். பள்ளி, கல்லுாரி, மற்றும் ஆபீஸ்விட்டுவீடு செல்வோருக்கு இப்பிரச்னையானது நிரந்தர தலைவலியாகவே உள்ளது.வழக்கமாக பண்டிகைக்காலங்களில் இதுபோல் நடப்பது சகஜம். ஆனால் இப்பிரச்னை தினமும் நடப்பதால் நடந்து செல்ல கூட வழிஇல்லாமல் தவிப்போரைக் கண்டு பரிதாப்பட வேண்டியுள்ளது.

நடவடிக்கை தேவை

சேலம் புதிய பஸ்ஸ்டாண்ட் பகுதி, 5 ரோடு பகுதி, பைபாஸ் பகுதி உள்ளிட்டவைகளில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க எப்படி உயர்மட்ட மேம்பாலத்தினை அமைத்தது. அதேபோல் நகரின் முக்கிய பகுதியான அணைமேடு, முள்ளுவாடி கேட் பகுதியில் தற்போது அமைக்கப்பட்டு வரும் உயர்மட்டமேம்பால பணிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் விரைவுபடுத்தவேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News