நாமகிரிப்பேட்டை, உரம்பு வருதராஜ பெருமாள் கோவிலில் கோலாகலமான தேர் திருவிழா
உரம்பு வருதராஜ கோவிலில் மாசி மகம் திருவிழா, தேர் திருவிழா மற்றும் தீ மிதி விழா -,பக்தர்களின் பெரும் கூட்டம்;
உரம்பு வருதராஜ பெருமாள் கோவிலில் தேர் திருவிழா கோலாகலம்
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை ஒன்றியம் உரம்பு ஊராட்சியில் உள்ள வருதராஜ பெருமாள் கோவிலில் நடைபெற்ற தீ மிதி மற்றும் தேர் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
மாசி மகம் நட்சத்திரத்தை முன்னிட்டு இந்த ஆண்டு தேர் திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை நடைபெற்ற தீ மிதி விழாவில் முதலில் கோவில் பூசாரி மற்றும் கோவில் மாடு ஆகியவை தீ மிதித்துச் சென்றன. அதைத் தொடர்ந்து, நேர்த்திக்கடன் செலுத்த வந்த பக்தர்கள் தங்கள் குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு தீ மிதித்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்களும் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர்.
தொடர்ந்து துலாபாரத்தில் பக்தர்கள் காணிக்கை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் குழந்தைகளின் எடைக்கு எடை கரும்பு, வாழைப்பழம், வெல்லம் உள்ளிட்ட பொருட்களை பக்தர்கள் வழங்கினர்.
மதியம் நடைபெற்ற தேர் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆர்வத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். டிராக்டர் உதவியுடன் கோவிலைச் சுற்றி முக்கிய வீதி வழியாகச் சென்ற தேர் மாலையில் நிலைக்கு திரும்பியது. இந்த விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்து புண்ணியம் பெற்றனர்.