திருச்செங்கோட்டில் சாலை மறியல் போராட்டம்
திருச்செங்கோட்டில் இரு இடங்களில் சாலை மறியல் போராட்டம், கழிவுநீர் குறித்த அச்சம்;
திருச்செங்கோட்டில் இரு இடங்களில் மக்கள் சாலை மறியல் போராட்டம்
திருச்செங்கோடு: திருச்செங்கோட்டில் கழிவுநீர் பிரச்சனை காரணமாக இரு வேறு இடங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்செங்கோட்டில் நேற்று முன்தினம் 12 மி.மீ. மழை பெய்தது. இந்த மழைநீருடன் கழிவுநீர் கலந்து சூரியம்பாளையம் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்ததால், பாம்புகள், நாய்கள், எலிகள் போன்ற உயிரினங்கள் இறந்து மிதந்து வந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், திருச்செங்கோடு-ஆனங்கூர் சாலையில் தலைமை தபால் நிலையம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த மறியல் போராட்டத்தை அறிந்து, திருச்செங்கோடு நகராட்சி ஆணையர் திரு. அருள், பொறியாளர் திரு. சரவணன், துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு. கிருஷ்ணன், காவல் ஆய்வாளர் திரு. வெங்கட்ராமன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். வெளிப்பகுதிகளில் இருந்து வரும் மழைநீர் மற்றும் பகுதி மக்கள் பயன்படுத்திய கழிவுநீர் சூரியம்பாளையம் பகுதி வழியாக செல்லாமல் தடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து, பொதுமக்கள் தங்கள் மறியல் போராட்டத்தைக் கைவிட்டனர். இந்த மறியலால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அதேபோல், கழிவுநீர் வருவதை கட்டுப்படுத்தக் கோரி, ஈரோடு சாலையில் சந்தைப்பேட்டை பகுதியிலும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இரண்டு நாட்களில் பேசி சரியான முடிவு எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து அந்த மறியலும் கைவிடப்பட்டது. இப்பகுதியிலும் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.