ரியல் எஸ்டேட் மோசடி குறித்து புகார் அளித்தவர்கள் அசல் ஆவனங்களை ஒப்படைத்து முதலீட்டை திரும்பப் பெறலாம்

ராசிபுரம் ரியல் எஸ்டேட் மோசடி குறித்து ஏற்கனவே புகார் அளித்துள்ளவர்கள், தங்களின் அசல் ஆவனங்களை போலீசில் ஒப்படைத்து, ஐகோர்ட் சிறப்பு குழு மூலம் முதலீட்டை திரும்பப் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.;

Update: 2025-03-31 03:50 GMT

பைல் படம்

நாமக்கல்,

ராசிபுரம் ரியல் எஸ்டேட் மோசடி குறித்து ஏற்கனவே புகார் அளித்துள்ளவர்கள், தங்களின் அசல் ஆவனங்களை போலீசில் ஒப்படைத்து, ஐகோர்ட் சிறப்பு குழு மூலம் முதலீட்டை திரும்பப் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, நாமக்கல் பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

ராசிபுரம் நகரில், கச்சேரி தெருவில் இயங்கி வந்த விஐபி நகர் என்ற ரியல் எஸ்டேட் நிறுவன உரிமையாளர் பச்சிராஜா என்பவர், வாடிக்கையாளர்கள் மாத தவணை முறையில் காலி வீட்டுமனை பெற கவர்ச்சிகரமான பல திட்டங்களை அறிமுகப்படுத்தினார். பொதுமக்களிடமிருந்து ஒவ்வொரு திட்டத்திற்கும் உரிய தொகைகளை முதலீடுகளாக பெற்று, திட்ட காலம் முடிந்த பின்னும் முதலீட்டாளர்களுக்குரிய மனைகளை பிரித்து வழங்காமலும், அவர்கள் முதலீடு செய்த தொகையை திருப்பித் தராமலும் இருந்துள்ளார். இதையொட்டி, முதலீட்டாளர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், நாமக்கல் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், விஐபி நகர் ரியல் எஸ்டேட் நிறுவனம், அதன் உரிமையாளர் பச்சிராஜா மற்றும் சிலர் கடந்த 2015ம் ஆண்டு மோசடி வழக்குப் பதிவு செய்தனர். அந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பொது மக்கள் அனைவரும் புகார் அளித்துள்ளனர்.

இந்தநிலையில், கடந்த 18-06-2018 ஆம் தேதி சென்னை ஐகோர்ட் ஓய்வுபெற்ற நீதிபதி அக்பர் அலி தலைமையில் சிறப்புக் குழு அமைத்து இவ்வழக்கில் புகார் அளித்த முதலீட்டார்களுக்குரிய முதலீடு தொகையை திரும்ப செலுத்துவதற்க்கு நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டது. சிறப்பு குழு முதல் நிலையாக தகுதி வாய்ந்த புகார் மனுதாரர்களுக்குரிய முதலீட்டாளர்களின் முதலீடு தொகைகளை திருப்பி செலுத்தி வருகிறது. இந்த நிலையில், இவ்வழக்கில் புகார் அளித்த போது, புகாருடன் சேர்த்து அசல் கிரைய ஒப்பந்த பத்திரம் மற்றும் மாதத்தவனைகுரிய அசல் ரசீதுகளை ஒப்படைக்காத புகார் மனுக்களை தகுதியற்ற புகார்தாரர்களாக வழக்கின் கோப்பில் வைக்கபட்டுள்ளது.

எனவே, இவ்வழக்கில், நாமக்கல் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில், ஏற்கனவே பாதிக்கப்பட்ட முதலீட்டார்கள் புகார் அளித்த போது, புகாருடன் சேர்த்து அசல் கிரைய ஒப்பந்த பத்திரம் மற்றும் மாதத்தவனை அசல் ரசீதிகளை ஒப்படைக்காத புகார்தாரர்கள், 21 நாட்களுக்கும் தாங்கள் எற்கனவே அளித்துள்ள புகார் சம்பந்தமான அனைத்து அசல் ஆவணங்களையும், நாமக்கல், சேலம் ரோட்டில் முருகன் கோயில் பஸ் ஸ்டாப் அருகில் உள்ள, பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி ஆபீசில் ஒப்படைத்து, ஐகோர்ட் சிறப்பு குழு மூலமாக தங்களுடைய முதலீட்டு தொகைகளை திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News