இயற்கை முறையில் காய்கறி சாகுபடி செய்வோர் மாநில விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

இயற்கை முறையில் காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகள் மாநில விருது பெற விண்ணப்பிக்கலாம்.

Update: 2024-10-01 02:45 GMT

பைல் படம் 

இயற்கை முறையில் காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகள் மாநில விருது பெற விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தோட்டக்கலை பயிரில், இயற்கை முறை சாகுபடியில் சிறந்து விளங்கும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், மாநில அளவில் சிறந்த விவசாயிகளை தேர்வு செய்து சான்றிதழுடன் ஊக்கத்தொகையாக முதல் பரிசு ரூ. 1 லட்சம், 2ம் பரிசு ரூ. 60 ஆயிரம் மற்றும் 3ம் பரிசு ரூ.40 ஆயிரம் வீதம் வழங்கப்படும்.

தோட்டக்கலை பயிரில் இயற்கை முறையில் சாகுபடி செய்யும், தமிழ்நாட்டில் வசிக்கும் சொந்த நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளும் விருது பெற விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப படிவங்களை தோட்டக்கலை துறை https://tnhorticulture.tn.gov.in/ என்ற வெப்சைட் மூலம் டவுன் லோடு செய்து கொள்ளலாம். மேலும் சம்மந்தப்பட்ட வட்டார அலுவலகங்களின் மூலமும் பெற்றுக் கொள்ளலாம். விவசாயிகள் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து சம்மந்தப்பட்ட வட்டார அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.

பெறப்பட்ட விண்ணப்பங்களை ஆய்வு செய்து, மாவட்ட அளவிலான குழுவின் ஒப்புதலுடன் மாவட்டத்திற்கு தலா ஒரு விண்ணப்பம் என தேர்வு செய்யப்பட்டு, மாநில தோட்டக்கலை இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். மாநில அளவிலுள்ள குழு உறுப்பினர்கள் பரிசீலனை செய்து பரிசு வழங்க தேர்ந்தெடுப்பார்கள். எனவே நாமக்கல் மாவட்டத்தில் இயற்கை முறையில் (அங்கக வேளாண்மை) தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News