மோகனூர் புனித செபஸ்தியார் தேர் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

மோகனூர் புனித செபஸ்தியார் ஆலய தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

Update: 2023-02-11 01:45 GMT

பைல் படம்

நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகே ஆர்.சி.பேட்டப்பாளையத்தில், புனித செபஸ்தியார் ஆலயம் உள்ளது. இங்கு ஆண்டு தோறும், தேர்த்திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு தேர்த் திருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று மாலை 6 மணிக்கு, பங்கு தந்தை செல்வம் தலைமையில் திருக்கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து சிறப்பு திருப்பலி நடந்தது.

இன்று (பிப்., 11) துவங்கி இரண்டு நாட்களுக்கு மாலை 6 மணிக்கு, திருப்பலியும், வரும் 13ம் தேதி மாலை 6 மணிக்கு, சிறப்பு திருப்பலி மற்றும் முதல் தேர்பவனி நடைபெறும். வரும், 14ம் தேதி காலை 10 மணிக்கு, சேலம் மறைமாவட்ட முதன்மை குரு மைக்கேல்ராஜா செல்வம் தலைமையில் திருவிழா திருப்பலி நடக்கிறது.

அன்று மதியம் 12 மணிக்கு, ஆனந்த ரெட்டியார் பொங்கல் வைக்கப்படுகிறது. மாலை 6 மணிக்கு, பெரிய தேர்பவனி நடைபெறும். மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் புனிதர் செபஸ்தியார் எழுந்தருளி, பக்தர்களுக்கு ஆசீர் வழங்குகிறார்.

தேர் பவனி, கீழப்பேட்டப்பாளையம், புதுத்தெரு, பரமத்தி வேலூர் சாலை, சர்க்கரை ஆலை, வண்டிகேட் வழியாக சென்று ஆலயத்தை அடைகிறது. வழிநெடுகிலும், பக்தர்கள் மெழுகுவர்த்தி ஏற்றியும், மாலை அணிவித்தும், புனிதரை வணங்குவார்கள். வரும், 15ம் தேதி காலை, 7 மணிக்கு, புனிதரின் கொடியிறக்கமும், காலை 9 மணிக்கு, நன்றி திருப்பலியும் நடக்கிறது. ஏற்பாடுகளை, பங்கு தந்தை, ஆலய பங்கு மக்கள் செய்துள்ளனர்.

Tags:    

Similar News