நாமக்கல்லில் பரபரப்பு: ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட சிறுமி மீட்பு

நாமக்கல் அருகே, ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட சிறுமி மீட்கப்பட்டார். சிறுமியை கடத்திய தம்பதியர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-05-02 02:30 GMT

நாமக்கல்லை அடுத்த காளி செட்டிப்பட்டி கிராமத்தில் முருகேசன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வருபவர் சரவணன் (39), லாரி டிரைவர். இவரது மனைவி கவுசல்யா (29). இவர்களுக்கு 8- ம் வகுப்பு படிக்கும் ஜெய்சன் (14) என்ற மகனும், 5- ம் வகுப்பு படிக்கும் மவுனிஷ்னா (11) என்ற மகளும் உள்ளனர்.

சரவணன்,  லாரியில் டிரைவாக சென்றுவிட்டதால். மற்ற மூவரும் வழக்கம் போல சனிக்கிழமை இரவு வீட்டின் மொட்டை மாடியில் படுத்து தூங்கியுள்ளனர். நள்ளிரவு 2 மணியளவில்,  டூ வீலர் ஒன்றில், முகமூடி அணிந்து வந்த 2 மர்ம நபர்கள் மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருந்த கவுசல்யாவிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரையும் அவரது மகன் ஜெய்சன் ஆகிய இரண்டு பேரையும் கை கால்களை கட்டிப் போட்டு விட்டு தூங்கிக் கொண்டிருந்த சிறுமி மவுனீஷ்னாவை கடத்திச் சென்றுவிட்டனர்.

டிரைவர் வேலை முடிந்து, அடுத்தநாள் காலை வீடு திரும்பிய கணவர் சரவணனிடம்,  குழந்தையை யாரோ கடத்தி சென்று விட்டனர் என கவுசல்யா கூறினார். சிறுமி கடத்தல் குறித்து எருமப்பட்டி போலீசில் புகார் அளித்தனர். இந்த நிலையில், சிறுமியின் தந்தை சரவணனுக்கு மர்ம நபர்கள் செல் போன் மூலம் தொடர்பு கொண்டு,  ரூ.50 லட்சம் கொடுத்தால் சிறுமியை விட்டு விடுவோம் என கூறியுள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் சிறுமியை கடத்திய மர்ம நபர்களை பிடிக்க,  7 தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் அடுத்த நாள் நள்ளிரவு 1 மணியளவில் நாமக்கல்- துறையூர் ரோட்டில் உள்ள அலங்காநத்தம் பிரிவில் ஒரு பெட்ரோல் பங்க் அருகே சிறுமியை போலீசார் மீட்டனர். மேலும் சிறுமியை கடத்தியதாக காளிசெட்டிபட்டியை சேர்ந்த மணிகண்டன் அவரது மனைவி பொன்னுமணி ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட இருவரும் சிறுமியின் உறவினர்கள். அவர்கள் எதற்காக சிறுமியை கடத்தினார்கள் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News