சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 2 பேருக்கு உடல் நலம் பாதிப்பு: ஓட்டலுக்கு சீல்

சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 2 பேருக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டதால் ஓட்டலுக்கு சீல் வைத்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்தார்.

Update: 2024-05-01 09:29 GMT

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா முன்னிலையில் ஓட்டலுக்கு சீல் வைக்கப்பட்டது.

நாமக்கல் பஸ் நிலையத்திற்கு எதிரில், உள்ள ஹோட்டலில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 2 பேர் உடல்நிலை பாதிக்கப்பட்டதால், அந்த ஹோட்டல் மாவட்ட ஆட்சியர் உமா முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

நாமக்கல் பஸ் நிலையம்  எதிரில் ஹோட்டல் கருணாநிதி என்ற பெயரில் அசைவ உணவகம் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தை நாமக்கல்லை சேர்ந்த ஜீவானந்தம் என்பவர் நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று செவ்வாய்க் கிழமை இரவு 7.30 மணி அளவில், நாமக்கல் எருமப்பட்டி அருகே உள்ள தேவராயபுரத்தை சேர்ந்த பகவதி (20) என்ற கல்லூரி மாணவர் அந்த உணவகத்தில் சிக்கன் ரைஸ் சாப்பிட்டார். பின்னர் 7 சிக்கன் ரைஸ் பார்சல் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு சென்றார். வீட்டில் இருந்த அவரது தாய் நதியா(36), தாத்தா சண்முகம் (67) உட்பட குடும்பத்தினருக்கு சிக்கன் ரைஸ் பொட்டலங்களை வழங்கியுள்ளார்.

அதன்பிறகு உணவை சாப்பிட்டதில் நதியா, சண்முகம் ஆகியோருக்கு மட்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இது பற்றிய தகவல் அறிந்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா மற்றும் உணவு பாதுகாப்பு வட்டார அலுவலர் முருகன் ஆகியோர் இன்று புதன்கிழமை பகல் 12 மணியளவில் சம்மந்தப்பட்ட ஹோட்டலுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அங்கு வைக்கப்பட்டிருந்த உணவு வகைகளை பரிசோதனை செய்து பார்த்தனர்.

இதனையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் அந்த ஹோட்டல் பூட்டி சீல் வைக்கப்பட்டது. சிக்கன் ரைஸ் சாப்பிட்டவர்களில் இருவர் மட்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இது தொடர்பாக, சிக்கன் ரைஸ் உணவை சேலத்தில் உள்ள உணவு பகுப்பாய்வு கூடத்துக்கு அதிகாரிகள் அனுப்பியுள்ளனர். உணவில் ஏதாவது கலப்படம் செய்யப்பட்டதா? என்பது குறித்து கல்லூரி மாணவர் பகவதியிடமும், மேலும் கெட்டுப்போன உணவு விற்பனை செய்யப்பட்டதா என ஹோட்டல் உரிமையாளர் ஜீவானந்தத்திடமும் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். சமீபத்தில் சிக்கன் சவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல் இந்த சம்பவமும் அசைவ உணவு பிரியர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News