தென்னிந்தியா முழுவதும் 4 நாட்களாக நடைபெற்று வந்த கேஸ் டேங்கர் லாரிகள் ஸ்டிரைக் வாபஸ்
மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள், லாரி உரிமையாளர்களின் கோரிக்கைளை ஏற்க சம்மதம் தெரிவித்ததால், தென்னிந்தியா முழுவதும் கடந்த 4 நாட்களாக நடைபெற்று வந்த கேஸ் டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.;
பைல் படம்
நாமக்கல்,
மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள், லாரி உரிமையாளர்களின் கோரிக்கைளை ஏற்க சம்மதம் தெரிவித்ததால், தென்னிந்தியா முழுவதும் கடந்த 4 நாட்களாக நடைபெற்று வந்த கேஸ் டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகாக, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய தென் மண்டல எல்.பி.ஜி கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் நாமக்கல்லை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த சங்க உறுப்பினர்களுக்கு சொந்தமான 5,514 புல்லட் கேஸ் டேங்கர் லாரிகள் மத்திய அரசு க்கு சொந்தமான ஐஓசி, பிபிசி, எச்பிசி ஆகிய எண்ணெய் நிறுனங்களின் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து, சமையல்கேஸ் சிலிண்டர்களில் நிரப்பும் பாட்டிலிங் மையங்களுக்கு காண்ட்ராக்ட் அடிப்படையில் இயக்கப்பட்டு வருகிறது.
தற்போதைய காண்ட்ராக்ட் வரும் ஆகஸ்ட் 31 ந் தேதி நிறைவடைய உள்ளது. இந்த நிலையில், புதிய டெண்டர் அறிவிப்பு எண்ணெய் நிறுவனங்களின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி மார்ச் 1 முதல் ஏப்ரல் 15 வரை லாரி உரிமையாளர்கள் டெண்டர் படிவங்களை சமர்ப்பிக்கலாம். கடந்த முறை நடைபெற்ற டெண்டரில் தென்மண்டலத்தில் மொத்தம் 5,514 எல்பிஜி டேங்கர் லாரிகளுக்கு டெண்டர் வழங்கப்பட்டு அவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட டெண்டரில் மொத்தம் 3,478 லாரிகளுக்கு மட்டுமே டெண்டர் வழங்கப்படும் என எண்ணெய் நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் 2036 லாரிகளுக்கு வேலை இழப்பு ஏற்படுவதுடன், லாரிகளை இயக்காமல் நிறுத்த வேண்டிய அபாயம் எழுந்துள்ளது. தற்போது அறிவித்துள்ள ஒப்பந்தத்தில் 21 டன் எடை ஏற்றும் 3 ஆக்ஸில்கள் கொண்ட லாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்ற விதி சேர்க்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சங்க உறுப்பினர்கள் ஓட்டிக்ககொண்டிருக்கும், 5,700 லாரிகளில் சுமார் 80 சதவீத லாரிகள் 18 டன் எடை ஏற்றும் 2 ஆக்ஸில்கள் கொண்ட லாரிகள் மட்டுமே உள்ளன. இதனால் புதிதாக யாரேனும் 3 ஆக்ஸில் லாரிகளை வாங்கி டெண்டரில் கலந்துகொண்டால் அவர்களுக்கு டெண்டர் கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஏற்கெனவே லாரி வைத்து தொழில் செய்வோருக்கு மீண்டும் டெண்டர் கிடைக்காமல் போய்விடலாம் என்ற கவலை டேங்கர் லாரி உரிமையாளர்களிடையே எழுந்தது. இது மட்டுமல்லாமல் டிரைவர், கிளீனர் பிரச்சினை போன்ற பல கட்டுப்பாடுகள் புதிய டெண்டர் விதிகளில் கூறப்பட்டுள்ளது.
புதிய டெண்டரில் உள்ள கட்டுப்பாடுகளை திருத்தம் செய்து, 2 ஆக்ஸில் கொண்ட லாரிகளை சதவித அடிப் படையில் டெண்டரில் சேர்த்துக் கொள்ள வேண்டும், வாடகை நிர்ணயம் செய்வதில் பழைய முறையை கடைப்பிடிக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை தென்மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் வலியுறுத்தி வந்தனர்.
மத்திய அரசுக்கு சொந்தமான ஆயில் கம்பெனிகள், டேங்கர் லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகளை ஏற்க மறுத்ததால், கடந்த 27 ந் தேதி காலை 6 மணி முதல் தென் மாநிலம் முழுவதும் எல்.பி.ஜி கேஸ் டேங்கர் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையொட்டி கடந்த 27ம் தேதி மாலை கோவையில் நடைபெற்ற, பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததால், கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்களின் போராட்டம் தீவிரமடைந்தது. வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 2 கோடி வாடகை இழப்பு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் நாளை 31ம் தேதி, மும்பையில் இந்தியாவில் உள்ள அனைத்து மண்டல கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதில் தென் மண்டல எல்பிஜி கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகள் கலந்து கொள்ள எண்ணெய் நிறுவன உயர் அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர். மேலும், தென்மண்டல லாரி உரிமையாளர்களின் நியாமான சில கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதாக எண்ணெய் கம்பெனி உயர் அதிகாரிகள் உத்தரவாதம் அளித்து, இன்று மதியம் இமெயில் மூலம் கடிதம் அனுப்பியுள்ளனர்.
இந்த நிலையில் தென் மண்டல எல்பிஜி கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் அதன் தலைவர் சுந்தர்ராஜன் தலைமையில் இன்று மாலை நாமக்கல்லில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் அவர் கூறியதாவது: கோரிக்கைகளை வலியுறுத்தி, தென்னிந்தியா முழுவதும் உள்ள கேஸ் டேங்கர் லாரிகள், கடந்த 4 நாட்களாக காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், எங்களது நியாமான சில கோரிக்கைகளை எண்ணெய் நிறுவனங்கள் ஏற்க முன் வந்துள்ளது. எனவே வேலை நிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.