விவசாயத்திற்கு பலன் தரும் பஞ்சகாவ்யா பயிற்சி
அகரம் கிராமத்தில், பஞ்சகாவ்யா, தசகாவ்யா தயாரிப்பு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது;
விவசாயத்திற்கு பலன் தரும் பஞ்சகாவ்யா பயிற்சி
நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் வட்டாரத்திற்குட்பட்ட அகரம் கிராமத்தில், நாமக்கல் தனியார் வேளாண் கல்லுாரியின் மாணவர்கள் கிராமப்புற அனுபவப் பயிற்சியின் ஒரு பகுதியாக பஞ்சகாவ்யா தயாரிப்பு குறித்த பயிற்சியை விவசாயிகளுக்கு அளித்து வருகின்றனர். பசுவின் பால், தயிர், நெய், கோமியம் மற்றும் சாணம் ஆகிய ஐந்து பொருட்களின் கலவையாக உருவாகும் பஞ்சகாவ்யா, ஒரு முக்கியமான இயற்கை விவசாய உற்பத்தியாகும். இதன் வாயிலாக விதைகள் மேம்படுத்தப்படுவதுடன், பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாட்டிற்கும் இது பயனுள்ளதாக இருக்கும். இதனை மேலும் திறனாக்கும் வகையில், தசகாவ்யா எனப்படும் மற்றொரு கலவையும் பயன்படுத்தப்படுகிறது. இதில், ஆடாதொடை, நொச்சி, வேம்பு, ஊமத்தை மற்றும் புங்கம் ஆகிய பச்சை இலைகளின் கரைசல்களை பஞ்சகாவ்யாவுடன் கலந்து தயாரிக்கப்படுகிறது. இந்த இயற்கை கலவைகள் இயற்கை விவசாயத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. பயிற்சியின் போது விவசாயிகள் மற்றும் மாணவர்கள் திறனாய்வுடன் கலந்துரையாடி, தங்களுடைய கருத்துக்களையும் பகிர்ந்துகொண்டனர்.