வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு..!

வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2023-12-21 12:15 GMT

வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம், கோம்பைக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

நாமக்கல்:

வெண்ணந்தூர் ஊராட்சி  ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர், நாமகிரிப்பேட்டை, சேந்தமங்கலம் ஆகிய ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகள்  குறித்து மாவட்ட ஆட்சியர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம், நெ.3.கொமாரபாளையம் ஊராட்சி, கோம்பைக்காடு பகுதியில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.9.60 லட்சம் மதிப்பீட்டில் தொடக்கப்பள்ளி அருகில் பேவர் பிளாக் தளம் அமைத்து தடுப்பு சுவர் அமைக்கப்பட்டுள்ளதை ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, நெ.3.கொமாரபாளையம் ஊராட்சி, அ.கோம்பைக்காடு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்ட சமையல் கூடத்தை பார்வையிட்டு, மாணவர்களுக்காக தயார் செய்யப்பட்டிருந்த உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.   மேலும், பள்ளி மாணவ, மாணவியர்களின் வருகை பதிவேடு, ஆசிரியர்களுக்கான வருகை பதிவேடுகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மாணவர்களிடம் தங்களது புத்தகத்தை வைத்து படித்து காட்டச் சொல்லி கலந்துரையாடினார்.

தொடர்ந்து, தொட்டியவலசு ஊராட்சியில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 30,000 லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அருகில் இருந்த கால்நடை மருந்தகத்தில் அப்பகுதியில் பயன்பெறும் கால்நடைகளின் எண்ணிக்கை, கால்நடைகளுக்கு வழங்கப்படும் மருத்துவ வசதிகள், மருந்துகளின் இருப்பு உள்ளிட்ட பல்வேறு விபரங்கள் குறித்து டாக்டரிடம் கேட்டறிந்தார்.

மேலும், நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், மத்துருட்டு பகுதியில் ஊரக உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதித்திட்டத்தின் கீழ், பூசலையூர் ஓடையின் குறுக்கே பாலம் அமைக்கப்பட்டுள்ளதையும், சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம், அக்கியம்பட்டி - எருமப்பட்டி சாலை முதல் கொல்லிமலை செல்லும் சாலை வரையில் புதிய தார் சாலை அமைக்கப்பட்டுள்ளதையும், துத்திக்குளத்தில் எம்எம்ஏ  தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டுள்ளதையும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Tags:    

Similar News