மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவருக்கு கட்சி மாறி ஓட்டுபோட்ட உறுப்பினரால் பரபரப்பு

நாமக்கல் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் தேர்தலில் திமுக வெற்றி; அதிமுக உறுப்பினர் கட்சி மாறி ஓட்டுப்போட்டதால் பரபரப்பு.

Update: 2021-10-22 12:30 GMT

நாமக்கல் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவராக வெற்றிபெற்ற செந்தில்குமாருக்கு, கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமார் எம்.பி பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அருகில் மேற்கு மாவட்ட செயலாளர் மூர்த்தி.

நாமக்கல் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் தேர்தலில் திமுக உறுப்பினர் வெற்றிபெற்றார். அதிமுக அணியில் இருந்தவர் திமுகவுக்கு ஓட்டுப்போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாமக்கல் மாவட்ட ஊராட்சி 6வது வார்டு உறுப்பினராகவும், துணைத்தலைவராகவும் இருந்த, முன்னாள் எம்.பி., சுந்தரம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையொட்டி நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுகவைச் சேர்ந்த துரைசாமி வெற்றிபெற்றார். இதையொட்டி மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல், மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் திமுக சார்பில் புதுச்சத்திரம் பகுதி 11வது வார்டு உறுப்பினர் செந்தில்குமாரும், அதிமுக சார்பில் பள்ளிபாளையம் 1வது வார்டு உறுப்பினர் செந்திலும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். பின்னர் நடைபெற்ற ரகசிய வாக்குப்பதிவில் திமுக உறுப்பினர் செந்தில்குமார் 9 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அதிமுக உறுப்பினர் செந்தில் 8 வாக்குகள் பெற்றார்.

தற்போது மாவட்ட ஊராட்சிக்குழு தலைரவாக அதிமுகவைச் சேர்ந்த சாரதா செயல்பட்டு வருகிறார். மொத்தம் 8 அதிமுக உறுப்பினர்கள் மற்றும் கூட்டணிக் கட்சியான பாமக உறுப்பினரையும் சேர்த்து மொத்தம் 9 பேர் அதிமுக அணியில் உள்ளனர். திமுக அணியில் திமுக உறுப்பினர்கள் 7 பேர் மற்றும் 1 கொமதேக உறுப்பினரையும் சேர்த்து மொத்தம் 8 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த நிலையில் அதிமுக அணியிலிருந்த ஒருவர் கட்சி மாறி ஓட்டுப்போட்டதால் திமுக உறுப்பினர் துணைத்தலைவராக வெற்றிபெற்றார். இதனால் அரசியல் கட்சியினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

துணைத்தலைவராக வெற்றிபெற்ற திமுகவைச் சேர்ந்த செந்தில்குமார் மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமார் எம்.பியை சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர் திரளான திமுகவினர் நாமக்கல் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

Tags:    

Similar News