அடர்வனம் அமைப்பதால் விவசாய மகசூல் அதிகரிக்கும்: கருத்தரங்கில் தகவல்
அடர்வனம் அமைப்பதால், நுண்ணிய காலநிலை வேறுபாடு ஏற்பட்டு, பறவைகள் தங்குவதற்கு வாழிடம் கிடைக்கும், இதன்மூலம் விவசாய வளம் அதிகரிக்கும் என, அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் செல்வம் பேசினார்.;
பைல் படம்
நாமக்கல்,
அடர்வனம் அமைப்பதால், நுண்ணிய காலநிலை வேறுபாடு ஏற்பட்டு, பறவைகள் தங்குவதற்கு வாழிடம் கிடைக்கும், இதன்மூலம் விவசாய வளம் அதிகரிக்கும் என, அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் செல்வம் பேசினார்.
நாமக்கல் பவுல்டரி டவுன் ரோட்டரி சங்கம், பவுல்டரி டவுன் இன்னர்வீல் சங்கங்கம் மற்றும் மாவட்ட தேசியப் பசுமைப்படை இனைந்து நடத்திய மியாவாக்கிக்காடு (அடர்வனம்) உருவாக்கும் விழா, நாமக்கல், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நடந்தது. சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கல்வி மற்றும் தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ரகுநாத் வரவேற்றார். பவுல்டரி டவுன் ரோட்டரி சங்கத்தலைவர் பிரபாகரன், இன்னர்வீல் சங்கத்தலைவி புவனேஸ்வரி, நாமக்கல் மாநகராட்சி சுகாதார அலுவலர் திருமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நாமக்கல் மாநகராட்சி மேயர் கலாநிதி, ரோட்டரி மாவட்ட முன்னாள் கவர்னர் சரவணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
நாமக்கல் மாவட்ட ஆசிரியர்கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் செல்வம் தலைமை வகித்து பேசியதாவது:
மியாவாக்கிக்காடுகள், 3க்கு 3 அடியில், நாட்டு தாவர இனங்களை அடர்த்தியாக நட்டு அடர்வனத்தை உருவாக்கும் முறையாகும். நெருக்கமாக தாவரங்களை நடுவதால் உணவு தயாரிக்க, சூரிய ஒளியின் தேவைக்காக அவைகள் போட்டிப்போட்டுக் கொண்டு வேகமாக வளர்கின்றன. பல்வேறு இலையடுக்குகள் உருவாவதால், காட்டின் ஈரம் ஆவியாகாமல் தடுக்கப்படுகிறது. தாவரங்களின் வேர்கள் நெருக்கமாக வளர்ந்து, நிலத்தின் ஈரம் காக்கப்படுகிறது. இதனால், மண்ணின் வளம் அதிகரிக்கும். அதிகப்படியான கர்பண்டை ஆக்ஸைடு ஒளிச்சேர்க்கைக்காக உறிஞ்சப்படுவதால், வளிமண்டலத்தில் வெப்பம் குறையும். அடர்வனம் இருக்கும் இடத்தில், நுண்ணிய காலநிலை வேறுபாடு காணப்படும். பறவைகள் தங்குவதற்கு வாழிடம் கிடைக்கும். பறவைகளுக்கு பழங்கள் உணவாகக் கிடைக்கும். வவ்வால்கள், தேனீக்கள், வண்ணத்துப்பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதன் காரணமாக, விவசாயப் பயிர்களில் மகரந்தச்சேர்க்கை நடப்பதால், விவசாய மகசூல் அதிகரிக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், 5,400 சதுர அடி கொண்ட அடர்வனத்தில், நாமக்கல் மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை உரக்கிடங்கில் இருந்து பெறப்பட்ட குப்பை, 3 அடி ஆழம் நிரப்பப்பட்டு, அதில் சொர்க்கம் மரம், சவுக்கு, மகிழம், மலைவேம்பு, ஏழிலைப்பாலை, கருநொச்சி, ராம்புட்டான்.
சப்போட்டா, ஊட்டி ஆப்பிள், கிலாக்காய், விளாம்பழம், நெட்டியலிங்கம் உள்ளிட்ட 48 இன மரங்களை நட்டு, மேயர் கலாநிதி அடர்வனம் அமைக்கும் வணிகளை தொடங்கி வைத்தார். நாமக்கல், சேலம், கரூர் மற்றும் திருச்சி மாவட்டங்களிலிருந்து, 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.