முதல்வர் பொதுநிவாரண நிதிக்கு ரூ.10 ஆயிரம்: நாமக்கல் கலெக்டர் ஆபீசில் தர்மபிரபு தாராளம்

பிச்சைக்காரர் ஒருவர், யாசகம் பெற்ற பணத்தில் இருந்து ரூ.10 ஆயிரத்தை, இரண்டாவது முறையாக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார்.

Update: 2023-02-20 12:15 GMT

முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 ஆயிரம் நிதி வழங்குவதற்காக, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த பூல்பாண்டியன்.

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு வருகை தந்த பிச்சைக்காரர் ஒருவர், யாசகம் பெற்ற பணத்தில் இருந்து ரூ.10 ஆயிரத்தை, இரண்டாவது முறையாக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் ஆலங்கிணற்றை சேர்ந்தவர் பூல் பாண்டியன் (73). பிச்சைக்காரரான இவர், 1980ல் குடும்பத்துடன் மும்பையில் குடியேறினார். அங்கு, துணிகளை அயர்னிங் செய்யும் தொழிலில் ஈடுபட்டபடி, யாசகம் பெற்று குடும்பத்தை நடத்தி வந்தார். இந்நிலையில், அவரது மனைவி சரஸ்வதி சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். தனது 3 குழந்தைகளையும் கரை சேர்த்த பூல் பாண்டியன், முழுநேர பிச்சைக்காரராக மாறினார். பிச்சை பெற்ற பணத்தில், மும்பையில் மரக்கன்று நடுவது, பள்ளி குழந்தைகளுக்கு உதவுவது போன்ற சமூக பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

மேலும், தான் பிச்சை பெற்ற பணத்தை, கொரோனா நிவாரண நிதி, இலங்கை தமிழருக்கு நிவாரண நிதி, முதல்வர் பொது நிவாரண நிதிக்கு. உள்ளிட்ட நிவாரண நிதிகளுக்கு, வங்கி மூலம் டிடி எடுத்து, எந்த மாவட்டத்தில் இருக்கிறாரோ அந்த மாவட்ட கலெக்டர் மூலம் அனுப்பி வருகிறார். இவரது சமூக சேவையை பாராட்டி, 2021ல், குடியரசு தினவிழாவில், மதுரை கலெக்டர் பாராட்டு சான்றிதழ் வழங்கியுள்ளார்.

இந்த நிலையில், தான் பிச்சை பெற்றதன் மூலம் கிடைத்த, ரூ. 10 ஆயிரத்தை, முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்குவதற்காக, இரண்டாவது முறையாக நேற்று, நாமக்கல் கலெக்டர் அலுவலகம் வந்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

யாசகம் பெறுவதன் மூலம் கிடைக்கு பணத்தை, முழுவதுமாக நான் வைத்துக் கொள்வதில்லை. குறிப்பிட்ட தொகை சேர்ந்ததும், அதை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்குவேன். மேலும், பள்ளிகளுக்கும் நன்கொடை வழங்கி வருகிறேன். அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று, முதல்வர் நிவாரண நிதிக்கு பணம் வழங்கி உள்ளேன். இதுவரை, 50 லட்சத்து, 80 ஆயிரம் ரூபாய் வழங்கி உள்ளேன். என் சேவையை பாராட்டி, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விருது வழங்கி உள்ளார்.

தற்போதைய முதல்வர் ஸ்டாலினும் பாராட்டு கடிதம் அனுப்பி உள்ளார். விரைவில், பிரதமரிடம் இருந்து விருது கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன். மேலும், பள்ளி மாணவர்களுக்கு நல்ல குடிநீர் கிடைக்க வேண்டும் என்பதற்காக, ஆர்.ஓ., சிஸ்டம், பள்ளிகளுக்கு கேமரா, மாணவர்கள் தரையில் அமரக்கூடாது என்பதற்காக, 40 ஆயிரம் சேர்கள் இதுவரை வாங்கித் தந்துள்ளேன். இந்த சேவையை, 50 ஆண்டுகளாக செய்து வருகிறேன் என்று கூறினார்.

Tags:    

Similar News