பலே! காஞ்சியில் தொழிற்சாலை ஓருபகுதியை மருத்துவமனையாக்கிய நிர்வாகம்!

காஞ்சிபுரத்தில் தொழிலாளர்களின் நலன் கருதி தொழிற்சாலையின் ஒரு பகுதியை மருத்துவமனையாக ஒரு நிர்வாகம் மாற்றி அசத்தியுள்ளது.

Update: 2021-05-23 08:45 GMT

தொழிற்சாலையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையம்.

காஞ்சிபுரம் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம் என அழைக்கப்படுகிறது. தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் அனைத்து மாநில தொழிலாளர்களும்  காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வருகின்றனர்.

தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களிடையே கொரோனா பரவல் அதிகமாக உள்ளதை அடுத்து சில தொழிற்சாலைகளில் ஐம்பது சதவீத பணியாளர்களுடன் பணிபுரிய அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர சில தொழிற்சாலைகள் தங்கள் உற்பத்தியை நிறுத்தி உள்ளது. 

இந்த நிலையில் ஸ்ரீபெரும்புதூர் இருங்காட்டுக்கோட்டை சிப்காட் பகுதியில் உள்ள ஸ்கிவிங் ஸ்டெல்லர் இந்தியா பிரைவேட் லிமிடெட் (Schwing Stetter India Private லிமிடெட்), நிறுவனம் தங்கள் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டால், அவர்களின் வீடுகளில் போதிய வசதிகள் இல்லாத நிலையில், அவர்களை தனிமை படுத்தி கொள்ள ஏதுவாகவும் , பரவலை தடுக்க அடிப்படை மருத்துவ உதவி செய்து கொடுக்கும் வகையில் கொரோனா சிகிச்சை மையத்தை உரிய அனுமதி பெற்று ‌‌ தொழிற்சாலை வளாகத்தில் துவக்கியுள்ளது. 

இங்கு ஆக்ஸிஜன் வசதி கொண்ட  ஐந்து படுக்கைகளும், 20 சாதாரண படுக்கைகளும் என 25 படுக்கைகள் உள்ளன. இங்கு 24மணி நேர உதவிக்கு மருத்துவர் மற்றும் செவிலியர்களும் இரண்டு அவசர ஊர்திகளும் மற்றும் சாப்பாடு, மருந்து வசதிகளும் உள்ளன. இதுவரை 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் பயன் பெற்றுள்ளனர்.

 தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு ஏற்பட்ட கொரோனா தொற்றை குணப்படுத்த நிறுவனமே மருத்துவமனையாக மாறியது தொழிலாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Tags:    

Similar News