சுதந்திர தின போராட்ட பொருட்களை சென்னை அருங்காட்சியகத்திற்கு வழங்க வேண்டுகோள்

சுதந்திர தின போராட்ட பொருட்களை சென்னை அருங்காட்சியகத்திற்கு வழங்க வேண்டுகோள் விடப்பட்டு உள்ளது.

Update: 2024-05-07 22:40 GMT

காஞ்சிபுரம் அரசு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள பொருட்கள்

சென்னையில் அமைய உள்ள சுதந்திர தின அருங்காட்சியகத்திற்கு சுதந்திர போராட்டம் தொடர்பான அரியவகை பொருட்களை காட்சிக்கு வைக்க வழங்கலாம் என காஞ்சிபுரம் அரசு அருங்காட்சியக அலுவலர் உமாசங்கர் தகவல் தெரிவித்து உள்ளார்.

அரசு அருங்காட்சியகங்கள் துறையின் ஆணையர் வெளியிட்ட செய்தி குறிப்பின்படி இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத்தின் தியாகத்தையும் பங்களிப்பையும் போற்றும் வகையில் சுதந்திர தின அருங்காட்சியகம் அமைக்கப்படும் என, 75 ஆவது சுதந்திர தின உரையின் போது தமிழக முதல்வர்மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி சென்னை மெரினா கடற்கரை எதிரில் பாரம்பரிய கட்டடமான ஹுமாயூன் மஹால் கட்டடத்தில் பெரிய அளவில் அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது.

இந்த அருங்காட்சியகம் சிறப்பாக அமைந்திட பொதுமக்கள் தங்கள் வசம் உள்ள சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால ஆவணங்கள், கையெழுத்து பிரதிகள், செய்தித்தாள் நகல்கள், சிறைவில்லை, ராட்டைகள், பட்டயங்கள், ராணுவ சீருடைகள், மற்றும் விடுதலை போராட்டம் குறித்த ரூபாய் நோட்டுகள், ஆகியவற்றை நன்கொடையாக அளிக்கலாம்.

மேலும் பொதுமக்கள் வழங்கும் பொருட்களுக்கு உரிய ஒப்புகை கடிதம் மற்றும் பாராட்டு சான்றிதழ் அருங்காட்சியக ஆணையரால் வழங்கப்படும். இவ்வகையான அரிய பொருட்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் போது, அப்பொருளை வழங்கியவர்களின் பெயர்களும் அதில் இடம் பெறும்.

எனவே, தங்கள் வசம் உள்ள அரிய பொருட்களை சென்னை அருங்காட்சியகத்திற்கோ அல்லது மாவட்டங்களில் உள்ள அருங்காட்சியகங்களிலோ வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்தை சார்ந்த பொதுமக்கள் தாங்கள் வழங்க விரும்பும் சுதந்திர போராட்டம் தொடர்பாக பொருட்களை காஞ்சிபுரம் மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில் வழங்கலாம். மேலும் விவரங்கள் தேவைப்பட்டால் கீழ்க்கண்ட எண் மூலம் 8189965485 என்ற மொபைல் போனில் தொடர்பு கொள்ளலாம் என கேட்டுக் கொண்டுள்ளார்

Tags:    

Similar News