சட்டவிரோத குடிநீர் இணைப்பை துண்டிக்க காஞ்சிபுரம் ஆட்சியர் எச்சரிக்கை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சட்டவிரோதமாக பெற்றுள்ள குடிநீர் இணைப்புகளை துண்டிக்க ஆட்சியர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

Update: 2024-05-07 22:29 GMT

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி.

வரும் இரண்டு மாதங்கள் கோடை காலம் என்பதால் குடிநீர் தேவை அனைவருக்கும் அளிக்கும் நோக்கில் அதனை சிக்கனமாக பயன்படுத்தல் , குடிநீர் வழங்கல் முறைகளை முறையாக உள்ளாட்சிகள் கண்காணித்தல் மற்றும் அதனை சீரழிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தியது.

அவ்வகையில் , காஞ்சிபுரம் மாவட்டம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளில் சட்ட விரோதமாக உள்ள குடிநீர் இணைப்புகளை துண்டித்திட நடவடிக்கைகள் மேற்கொள்ள தெரிவிக்கப்பட்டு அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது

காஞ்சிபுரம் மாவட்டம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளில் சட்டவிரோதமாக உள்ள குடிநீர் இணைப்புகளை துண்டித்திட கீழ்க்கண்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள தெரிவிக்கப்படுகிறது.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சி பகுதிகளில் உள்ள முறையற்ற குடிநீர் குழாய் இணைப்புகள் மற்றும் சட்ட விரோதமாக பயன்படுத்தப்படும் மின் மோட்டார் இணைப்புகள் பயன்படுத்தப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் மூலம் துண்டித்து பறிமுதல் செய்யப்படும்.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சி பகுதிகளில் தினசரி குடிநீர் வழங்குவதை முறைப்படுத்தும் பொருட்டு வீடுகள், திருமண மண்டபங்கள் கடைகள் மற்றும் தொழிற்சாலைகளில் சட்ட விரோதமாக மின்மோட்டார் இணைப்புகள் பயன்படுத்தப்பட்டிருந்தால் அதனை துண்டிப்பு செய்து அபராதம் விதிக்கப்படும்.

கோடைகாலங்களில் வறட்சியினை தவிர்க்கும் பொருட்டு குடிநீர் வீணாகாமல் சிக்கனமாக பயன்படுத்திட பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி  தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News